உல்லாச வீடியோ காட்சியில் இருப்பது நான் இல்லை மந்திரி பதவியை இழந்த எச்.ஒய்.மேட்டி பேட்டி


உல்லாச வீடியோ காட்சியில் இருப்பது நான் இல்லை மந்திரி பதவியை இழந்த எச்.ஒய்.மேட்டி பேட்டி
x
தினத்தந்தி 18 Dec 2016 11:21 PM GMT (Updated: 2016-12-19T04:50:51+05:30)

உல்லாச வீடியோ காட்சியில் இருப்பது நான் இல்லை என்று மந்திரி பதவியை இழந்த எச்.ஒய்.மேட்டி கூறினார். மந்திரி பதவி ராஜினாமா கலால்துறை மந்திரியாக இருந்த எச்.ஒய்.மேட்டி, ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் கன்னட செய்தி தொலைக்காட்சிகளில் வெ

பெங்களூரு

உல்லாச வீடியோ காட்சியில் இருப்பது நான் இல்லை என்று மந்திரி பதவியை இழந்த எச்.ஒய்.மேட்டி கூறினார்.

மந்திரி பதவி ராஜினாமா

கலால்துறை மந்திரியாக இருந்த எச்.ஒய்.மேட்டி, ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் கன்னட செய்தி தொலைக்காட்சிகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இந்த சம்பவம் மாநில காங்கிரஸ் அரசுக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து பாகல்கோட்டையில் உள்ள மேட்டியின் வீடு பூட்டிய நிலையில் காட்சி அளித்தது. அவருடைய வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த மந்திரி பதவியை ராஜினாமா செய்த பிறகு யார் கண்ணிலும் படாமல் இருந்த மேட்டி, பாகல்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் சொந்த கிராமமான திம்மாபுராவில் உள்ள தனது வீட்டிற்கு நேற்று முன்தினம் வந்தார். அவர் அங்கு ஒரு கன்னட பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

எதிரிகள் யாரும் இல்லை

நான் எந்த பெண்ணுடனும் உல்லாசமாக இருக்கவில்லை. நான் இருப்பது போன்ற வெளியான உல்லாச வீடியோ காட்சிகள் திரிக்கப்பட்டுள்ளது. எனக்கு எதிராக சதி செய்துள்ளனர். என்னுடைய அப்பாவித்தனத்தை தவறாக பயன்படுத்தி இந்த சதியை அரங்கேற்றியுள்ளனர். இதை முதல்–மந்திரியிடம் எடுத்து கூறினேன்.

எனக்கு தனிப்பட்ட முறையில் எதிரிகள் யாரும் இல்லை. அவ்வாறு இருக்கும்போது இந்த சதியை யார்? என்றே எனக்கு தெரியவில்லை. இதுபற்றி சி.ஐ.டி. விசாரணைக்கு முதல்–மந்திரி உத்தரவிட்டுள்ளார். இந்த விசாரணை அறிக்கை வந்த பிறகு சதியின் பின்னணியில் யார் உள்ளனர் என்பது தெரியவரும்.

அனுபமா செனாயிக்கு மீண்டும் பணி

இந்த சம்பவத்தின் பின்னணியில் செயல்பட்ட போலீஸ்காரர் சுபாசுக்கு போலீஸ் பணியை நான் தான் வாங்கி கொடுத்தேன். நான் மந்திரியான பிறகு என்னுடைய மெய்காப்பாளர் பணிக்கு நியமிக்குமாறு கேட்டு அவர் என்னிடம் வந்தார். அந்த பணியில் ஏற்கனவே 3 பேர் இருப்பதால் காலி இடம் இல்லை என்று கூறி அனுப்பி விட்டேன்.

இந்த நிலையில் நான் ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் பரவி வருவதாக என்னுடைய ஆதரவாளர்கள் என்னிடம் கூறினர். நான் சுபாசை வரவழைத்து இதுபற்றி கேட்டேன். தன்னிடம் அவ்வாறு ஒரு வீடியோ இருப்பதாகவும், பணி நீக்கம் செய்யப்பட்ட பெண் போலீஸ் அதிகாரி அனுபவா செனாயிக்கு மீண்டும் பணி வழங்கினால் அந்த வீடியோ காட்சியை பகிரங்கப்படுத்தாமல் கொடுத்து விடுவதாகவும் என்னிடம் கூறினார்.

நான் இல்லை

அனுபமா செனாயை மீண்டும் பணி நியமனம் செய்ய தொழில்நுட்ப ரீதியாக சிக்கல் இருக்கிறது என்பது எனக்கு தெரியும். அதனால் அந்த விஷயம் பற்றி அதிகம் பேச விரும்பவில்லை. எனது மகன் பேரம் பேசி, ரூ.50 லட்சம் கொடுத்ததாக கூறுவது தவறானது. என்னிடம் அவ்வளவு பணம் இல்லை. ஒரு பைசா கூட யாருக்கும் கொடுக்கவில்லை. பணம் தருமாறு யாரும் கேட்கவில்லை.

அந்த வீடியோ காட்சியில் இருப்பதாக கூறப்படும் பெண் எனது தூரத்து உறவுக்கார பெண். எனக்கு அவரை நன்றாக தெரியும். அதனால் என்னிடம் அவ்வப்போது வந்து செல்வார். எனக்கும், அந்த பெண்ணுக்கும் வேறு எந்த தொடர்பும் கிடையாது. நான் அத்தகைய ஈனத்தனமான வேலைக்கு போவது இல்லை. அந்த உல்லாச வீடியோ காட்சியில் இருப்பது நான் இல்லை. அந்த வீடியோ காட்சியை திரித்துள்ளனர்.

அரசியலில் இருப்பேன்

நான் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். அப்போது பனியனுடன் இருந்தேன். அந்த காட்சியை எடுத்து இந்த வீடியோவில் சேர்த்துள்ளனர். என் மீது அந்த பெண் கூறிய புகார் பொய்யானது. இந்த செய்தியால் அரசுக்கும், கட்சிக்கும் இக்கட்டான சூழல் ஏற்படக்கூடாது என்பதால் நான் மந்திரி பதவியை ராஜினாமா செய்தேன்.

என் மீது புகார் வந்தவுடன் நான் மந்திரி பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருந்தேன். இதை சித்தராமையா ஒப்புக்கொள்ளவில்லை. முதலில் உண்மையை ஆய்வு செய்யலாம் என்று அவர் கூறினார். என்னுடைய தொகுதி மக்கள் என்னை கைவிட மாட்டார்கள். நான் அரசியலில் இருந்து விலக மாட்டேன். இறுதி வரை அரசியலில் இருப்பேன். போராடுவேன். பயந்து ஓட மாட்டேன். இனி என் தொகுதி மீது அதிக கவனம் செலுத்துவேன்.

இவ்வாறு மேட்டி கூறினார்.


Next Story