தொழில் அதிபரிடம் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித்தருவதாக மோசடி: 2 போலீஸ்காரர்கள் பணி இடைநீக்கம்


தொழில் அதிபரிடம் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித்தருவதாக மோசடி: 2 போலீஸ்காரர்கள் பணி இடைநீக்கம்
x
தினத்தந்தி 18 Dec 2016 11:53 PM GMT (Updated: 2016-12-19T05:23:05+05:30)

நெல்லையில் தொழில் அதிபரிடம் பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றித்தருவதாக மோசடியில் ஈடுபட்ட 2 போலீஸ்காரர்களை நேற்று மாநகர போலீஸ் கமிஷனர் திருஞானம் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். நெல்லை தொழில் அதிபர் 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த

நெல்லை

நெல்லையில் தொழில் அதிபரிடம் பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றித்தருவதாக மோசடியில் ஈடுபட்ட 2 போலீஸ்காரர்களை நேற்று மாநகர போலீஸ் கமிஷனர் திருஞானம் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

நெல்லை தொழில் அதிபர்

500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் மாதம் 8–ந் தேதி மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து பொதுமக்கள் தங்களிடம் இருந்த 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை பெற்று வருகின்றனர். பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள வருகிற 31–ந் தேதியுடன் கெடு முடிவடைகிறது.

இந்த நிலையில் நெல்லையை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் தன்னிடம் இருந்த ரூ.5 லட்சம் வரையிலான 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்ற முயற்சி செய்து வந்தார். ஆனால் ரூ.2½ லட்சத்துக்கு மேல் வங்கியில் செலுத்தினால் வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொள்வார்கள் என்று கருதினார்.

ஆயுதப்படை போலீஸ்காரர்கள்

இதை அறிந்த போலீஸ்காரர்கள் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றித் தருவதாக கூறி தொழில் அதிபரை அணுகினர். அவர்கள் 2 பேரும் சேர்ந்து பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித்தந்தால், தங்களுக்கு அதில் 20 சதவீதம் கமிஷன் தரவேண்டும் என்று கேட்டுள்ளனர். அந்த போலீஸ்காரர்களை நம்பிய அந்த தொழில் அதிபர் ரூ.5 லட்சம் கொடுத்தார்.

ஓரிரு நாட்களில் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் வந்து சந்திப்பதாக கூறிவிட்டு அந்த போலீஸ்காரர்கள் சென்றுவிட்டார்கள். ஆனால், பல நாட்கள் ஆகியும் புதிய ரூபாய் நோட்டுகள் எதையும் அந்த போலீஸ்காரர்கள் மாற்றிக் கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

கமிஷனரிடம் புகார்

போலீஸ்காரர்கள் 2 பேரும் ரூ.5 லட்சத்துக்கான பழைய ரூபாய் நோட்டுகளை வாங்கிக் கொண்டு தன்னை மோசடி செய்து விட்டதாக அந்த தொழில் அதிபர் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் திருஞானத்திடம் புகார் அளித்தார்.

அதன் பேரில் போலீஸ் கமிஷனர் உத்தரவுப்படி ரகசிய விசாரணை நடத்தப்பட்டது. அதில் போலீஸ்காரர்கள் 2 பேரும், தொழில் அதிபரிடம் இருந்த கருப்பு பணத்தை கமிஷன் அடிப்படையில் மாற்றித்தருவதாக கூறி வாங்கி மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. செல்லாத நோட்டுகளை மாற்றுவதற்காக அவர்கள் போலீஸ் ஜீப்பையும் எடுத்துச் சென்றிருப்பதையும் விசாரணையில் கண்டுபிடித்தனர்.

விசாரணை

அவர்கள் நெல்லை மாநகர ஆயுதப்படையில் பணிபுரியும் மாஹிம் அபுபக்கர் மற்றும் ஈசுவர மூர்த்தி என்பதும் தெரியவந்தது. அவர்களிடம் போலீஸ் அதிகாரிகள் குழுவினர் 2 நாட்களாக விசாரணை நடத்தினர்.

நேற்று தொழில் அதிபரிடம் பெறப்பட்ட பணத்தை சம்பந்தப்பட்ட 2 போலீஸ்காரர்களிடம் இருந்து பெற்று தொழில் அதிபர் வசம் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மோசடி பிரச்சினையை முடித்து 2 போலீசாரும் விடுவிக்கப்பட்டு உள்ளார்கள்.

பணிஇடைநீக்கம்

இந்த நிலையில் 2 பேர் மீதும் துறைரீதியாக நடவடிக்கை எடுக்க விசாரணை அதிகாரிகள் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தார்கள். இதையடுத்து போலீஸ்காரர்கள் மாஹிம் அபுபக்கர் மற்றும் ஈசுவரமூர்த்தி ஆகிய 2 பேரையும் நேற்று இரவு பணி இடைநீக்கம் (சஸ்பெண்ட்) செய்து மாநகர போலீஸ் கமிஷனர் திருஞானம் நேற்று உத்தரவிட்டார்.


Next Story