லத்தியை வீசியதால் வாலிபர் விபத்தில் பலியானதாக புகார்: வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் பெற்றோர், கலெக்டரிடம் வலியுறுத்தல்


லத்தியை வீசியதால் வாலிபர் விபத்தில் பலியானதாக புகார்: வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் பெற்றோர், கலெக்டரிடம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 19 Dec 2016 11:30 PM GMT (Updated: 2016-12-19T18:52:55+05:30)

வாகன சோதனையின் போது லத்தியை மோட்டார் சைக்கிள் மீது வீசியதால் விபத்தில் வாலிபர் இறந்ததாக கூறி அந்த வாலிபரின் பெற்றோர் சேலம் மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்தனர். மேலும் சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர் வா

சேலம்,

வாகன சோதனையின் போது லத்தியை மோட்டார் சைக்கிள் மீது வீசியதால் விபத்தில் வாலிபர் இறந்ததாக கூறி அந்த வாலிபரின் பெற்றோர் சேலம் மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்தனர். மேலும் சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்

வாலிபர் சாவு

இளம்பிள்ளை அருகே உள்ள கோனேரிப்பட்டி பூசாரி காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருடைய மகன் சரவணன் (வயது 24). இவர் கடந்த 17–ந் தேதி கறிக்கடை திட்டு கூட்டாத்துபுளியமரம் அருகே சென்ற போது பின்னால் வந்த லாரி மோதி இறந்தார்.

அவர் போலீசார் வாகன சோதனையை பார்த்து திரும்பியதால் இந்த விபத்தில் சிக்கியதாக போலீசார் மீது அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டி வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

கொலை குற்றம்

இந்தநிலையில் நேற்று கோவிந்தராஜ் தனது குடும்பத்தினருடன் சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் அவர் கலெக்டர் சம்பத்தை சந்தித்து பரபரப்பான புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–

எனது மகன் சென்ற மோட்டார் சைக்கிளின் சக்கரத்திற்குள் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் லத்தியை வீசியதால் தான் கீழே விழுந்து உயிரிழந்தார். இந்த செயல் கொலை குற்றத்திற்கு சமமாகும்.

இதையடுத்து சரவணனின் உடலை எரித்த சிறிது நேரத்தில் போலீசார் எங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மற்றும் உறவினர்கள் தான் கலவரத்தில் ஈடுபட்டதாகவும், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய உள்ளதாகவும் மிரட்டினார்கள். ஆனால் எங்களுக்கும் கலவரத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என போலீசாரிடம் கூறினோம்.

நடவடிக்கை

இதைக்கேட்ட போலீசார் கலவரத்தில் ஈடுபட்டவர்களின் பெயர்களை நீங்கள் தெரிவிக்க வேண்டும் என மிரட்டி சென்றனர். எனவே சரவணன் சாவுக்கு காரணமான போலீசார் மீதும், பொய் வழக்கு போடுவதாக மிரட்டும் போலீசார் மீதும் நடவடிக்கை எடுப்பதுடன், எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவரிடம் தெரிவித்தார். வாலிபர் சாவுக்கு போலீசார் மீது பெற்றோர் கலெக்டரிடம் புகார் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story