திருப்பதியில் இருந்து திருமலைக்கு குடிபோதையில் வந்த 10 பேர் கைது மோட்டார் சைக்கிள், மதுபானம் பறிமுதல்


திருப்பதியில் இருந்து திருமலைக்கு குடிபோதையில் வந்த 10 பேர் கைது மோட்டார் சைக்கிள், மதுபானம் பறிமுதல்
x
தினத்தந்தி 19 Dec 2016 3:51 PM GMT (Updated: 2016-12-19T21:21:33+05:30)

திருப்பதியில் மதுபானம் குடித்து விட்டு வாகனங்களில் திருமலையை நோக்கி வந்த 10 பேர் அலிபிரி டோல்கேட்டில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள், 2 மதுபான பாட்டில்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மதுபானத்துக்குத் தடை திருப்பதி ஏ

திருமலை,

திருப்பதியில் மதுபானம் குடித்து விட்டு வாகனங்களில் திருமலையை நோக்கி வந்த 10 பேர் அலிபிரி டோல்கேட்டில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள், 2 மதுபான பாட்டில்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மதுபானத்துக்குத் தடை

திருப்பதி ஏழுமலையான் கோவில் இந்துக்களின் புனிதத்தலமாக கருதப்படுகிறது. எனவே திருமலையில் வசிக்கும் உள்ளூர் மக்கள், கோவில்களுக்கு வரும் பக்தர்கள் திருமலை பகுதியில் மதுபானம், இறைச்சி, மீன், முட்டை, புகையிலைப் பொருட்கள், குட்கா பாக்குகள் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் திருமலையில் சிலர் மதுபானம் குடித்தபோது, போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் திருப்பதி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, அவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

மேலும் பக்தர்கள், தொழிலாளர்கள் பலர் திருப்பதியில் மதுபானத்தை குடித்து விட்டு போதையில் கார், வேன், ஜீப், பஸ், மோட்டார் சைக்கிள்களில் திருமலைக்கு வருவதாக ஏராளமான புகார்கள் வந்தன. திருமலை கலால் போலீசாரும், தேவஸ்தான பறக்கும்படை அதிகாரிகளும் நேற்று முன்தினம் அலிபிரி டோல்கேட்டில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

10 பேர் கைது

அப்போது திருப்பதியில் இருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் பஸ்களில் திருமலைக்கு பயணம் செய்த டீ மாஸ்டர்கள் 2 பேர், சமையல்காரர்கள் 2 பேர், தனியார் மட ஊழியர்கள் 2 பேர் மற்றும் கட்டிடமேஸ்திரி, கட்டிடத்தொழிலாளி, கார் டிரைவர், திருப்பதி தேவஸ்தான ஊழியர் என மொத்தம் 10 பேர் மதுகுடித்து விட்டு போதையில் திருமலைக்குப் பயணம் செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து மேற்கண்ட 10 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2 மதுபான பாட்டில்கள், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கலால் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் முரளிமோகன் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இதுதவிர ஸ்ரீவாரிமெட்டு மலைப்பாதை வழியாக நடந்து வருவோரை கலால் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.


Next Story