சட்டவிரோதமாக கைது செய்து 17 வயது சிறுவனை துன்புறுத்தல்: ரூ.20 லட்சம் இழப்பீடு கேட்டு வழக்கு உள்துறை செயலாளர் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு


சட்டவிரோதமாக கைது செய்து 17 வயது சிறுவனை துன்புறுத்தல்: ரூ.20 லட்சம் இழப்பீடு கேட்டு வழக்கு உள்துறை செயலாளர் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 19 Dec 2016 10:45 PM GMT (Updated: 2016-12-19T22:08:56+05:30)

சட்ட விரோதமாக கைது செய்து துன்புறுத்தியதற்காக ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கேட்டு 17 வயது சிறுவன் தாக்கல் செய்த மனுவுக்கு உள்துறை செயலாளர் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோதமாக கைது விருதுநகர் ஆதிப்பட்டியை சேர்ந்த பா

மதுரை,

சட்ட விரோதமாக கைது செய்து துன்புறுத்தியதற்காக ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கேட்டு 17 வயது சிறுவன் தாக்கல் செய்த மனுவுக்கு உள்துறை செயலாளர் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோதமாக கைது

விருதுநகர் ஆதிப்பட்டியை சேர்ந்த பாலாஜி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறிருப்பதாவது:–

நான் எனது உறவினரின் வீட்டில் தங்கி தொழிற்கல்வி படித்து வருகிறேன். இந்தநிலையில், எனது உறவினருக்கும், வேறொருவருக்கும் ஏற்பட்ட பிரச்சினையில் அது தொடர்பாக ஏதும் அறியாத என்னை, பொய்யான குற்றம் சுமத்தி, திருத்தங்கல் போலீசார் கடந்த ஜூன் மாதம் கைது செய்தனர். அன்று சட்டவிரோதமாக காவலில் வைத்து, 2 நாட்கள் கழித்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி நெல்லை சிறையில் அடைத்தனர்.

அந்த சமயம் எனக்கு 17 வயது தான் ஆனது. இதனை அறிந்தும், திருத்தங்கல் போலீசார் என்னை சட்டவிரோதமாக அடைத்து வைத்து அடித்து துன்புறுத்தினார்கள்.

ரூ.20 லட்சம் இழப்பீடு

எனவே விருதுநகர் மாவட்ட மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் விஜயலெட்சுமி, திருத்தங்கல் போலீஸ்நிலைய தலைமை காவலர்கள் வெங்கடேஷ், கணேசன் ஆகியோர் மீது சட்ட மற்றும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். எனக்கு 20 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கவும், அதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

பதில் அளிக்க உத்தரவு

இந்த மனு நீதிபதி கோகுல்தாஸ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனு தொடர்பாக உள்துறை செயலாளர், டி.ஜி.பி., விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட அதிகாரிகள் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 5–ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.


Next Story