தொட்டபெட்டாவில் தமிழ்நாடு ஓட்டல் கட்டிடம் கட்டும் பணியை தடுத்து நிறுத்திய வனத்துறையினர்


தொட்டபெட்டாவில் தமிழ்நாடு ஓட்டல் கட்டிடம் கட்டும் பணியை தடுத்து நிறுத்திய வனத்துறையினர்
x
தினத்தந்தி 19 Dec 2016 10:15 PM GMT (Updated: 2016-12-20T01:22:30+05:30)

ஊட்டி அருகே தொட்டபெட்டாவில் கட்டப்பட்டு வந்த தமிழ்நாடு ஓட்டல் கட்டிடம் கட்டும் பணியை வனத்துறையினர் தடுத்து நிறுத்தி உள்ளனர். தொட்டபெட்டா நீலகிரி மாவட்டத்துக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இவர்கள் பூங்காக்கள் மட்டுமின்றி வனப

ஊட்டி

ஊட்டி அருகே தொட்டபெட்டாவில் கட்டப்பட்டு வந்த தமிழ்நாடு ஓட்டல் கட்டிடம் கட்டும் பணியை வனத்துறையினர் தடுத்து நிறுத்தி உள்ளனர்.

தொட்டபெட்டா

நீலகிரி மாவட்டத்துக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இவர்கள் பூங்காக்கள் மட்டுமின்றி வனப்பகுதிகளையும் கண்டு ரசித்து செல்கின்றனர். வனப்பகுதியையொட்டி தனியார் கடைகள் அமைக்க முடியாது.

இதனை தொடர்ந்து சுற்றுலா பயணிகளின் வசதிக்காக தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் நீலகிரியில் உள்ள முதுமலை தெப்பக்காடு, தொட்டபெட்டா, பைக்காரா, படகு இல்லம் ஆகிய இடங்களில் தமிழ்நாடு ஓட்டல் திறக்கப்பட்டது. மேலும் ஊட்டி மத்திய பஸ் நிலையம் அருகில் சிறுவர் பூங்காவும் சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் பராமரிக்கப்பட்டு வந்தது.

மூடப்பட்ட தமிழ்நாடு ஓட்டல்கள்

இந்த நிலையில் முதுமலை தெப்பக்காட்டில் இயங்கி வந்த தமிழ்நாடு ஓட்டலுக்கு உரிய குத்தகை காலம் முடிந்து விட்டதாக கூறி வனத்துறையினர் ஓட்டலை மூடிவிட்டனர். தற்போது இந்த ஓட்டலை வனத்துறை மூலம் ஆதிவாசி மக்கள் நடத்தி வருகின்றனர்.

மேலும் ஊட்டி தொட்டபெட்டாவில் உள்ள தமிழ்நாடு ஓட்டலுக்கும் குத்தகை காலம் முடிந்து விட்டதாக கூறி ஓட்டலை மூட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். பின்னர் மாவட்ட கலெக்டர் முயற்சியால் தமிழ்நாடு ஓட்டல் தொடர்ந்து இயங்கி வந்தது.

பழுதடைந்து கட்டிடம்

தற்போது தொட்டபெட்டாவில் உள்ள தமிழ்நாடு ஓட்டல் கட்டிடம் முற்றிலும் பழுதடைந்து இடியும் நிலையில் காணப்பட்டது. இதனை தொடர்ந்து பழுதடைந்த பகுதிகளை புனரமைக்க சுற்றுலா வளர்ச்சி கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் திடீரென்று தமிழ்நாடு ஓட்டல் கட்டிட பணிகளை வனத்துறையினர் தடுத்து நிறுத்தி உள்ளனர். இதனால் தமிழ்நாடு ஓட்டல் கட்டிடம் கட்டும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள் தொட்டபெட்டாவிற்கு வந்தால் சாப்பிடுதவற்கு உணவகம் இல்லாத நிலை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே கட்டிடம் கட்டும் பணியை அனுமதிக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story