‘வார்தா’ புயலால் பாதிப்பு: போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தகவல்


‘வார்தா’ புயலால் பாதிப்பு: போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 19 Dec 2016 10:15 PM GMT (Updated: 2016-12-20T02:17:41+05:30)

‘வார்தா’ புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்கும் பணியில் அரசு அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தெரிவித்தார். கலெக்டர் பார்வையிட்டார் திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் போளிவாக்கம் மற்றும் மேல்நல்லாத்தூ

திருவள்ளூர்

‘வார்தா’ புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்கும் பணியில் அரசு அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

கலெக்டர் பார்வையிட்டார்

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் போளிவாக்கம் மற்றும் மேல்நல்லாத்தூர் கிராமங்களில் ‘வார்தா’ புயலால் சேதம் அடைந்த மின்கம்பங்கள் மற்றும் வீடுகளை நேற்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி நேரில் சென்று பார்வையிட்டார்.

அப்போது அந்தந்த பகுதிகளில் சேதமடைந்த மின்கம்பங்களை சீரமைக்கும் பணியை பார்வையிட்ட கலெக்டர், அந்த பணிகளை விரைந்து முடிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி கூறியதாவது:–

போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு

கடந்த 12–ந் தேதி ஏற்பட்ட ‘வார்தா’ புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் பலத்த சேதம் ஏற்பட்டது. இதில் விவசாயிகளுக்கு நெற்பயிர், வாழை, கரும்பு போன்ற பயிர் வகைகள் பெரும் சேதமடைந்தது. மின்சார டிரான்ஸ்பார்மர்களும், மின்கம்பங்களும் உடைந்து விழுந்தன. இதனை சீரமைக்கும் பணியில் மின்வாரிய அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.

மேலும் பொதுப்பணித்துறையினர், தோட்டக்கலைத்துறையினர், குடிநீர் வடிகால் வாரியம், நெடுஞ்சாலைத்துறை, வேளாண்மைத்துறை என பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் சென்று ‘வார்தா’ புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அவருடன் பி.வேணுகோபால் எம்.பி., பொன்னேரி எம்.எல்.ஏ. சிறுணியம் பலராமன், ஒன்றிய செயலாளர் சூரகாபுரம் கே.சுதாகர், போளிவாக்கம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பூங்காவனம் மணி மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story