கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் போராட்டம் ஊரக வேலை திட்ட பணியாளர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்க கோரிக்கை


கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் போராட்டம் ஊரக வேலை திட்ட பணியாளர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்க கோரிக்கை
x
தினத்தந்தி 19 Dec 2016 11:00 PM GMT (Updated: 19 Dec 2016 9:10 PM GMT)

கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் போராட்டம் ஊரக வேலை திட்ட பணியாளர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்க கோரிக்கை

நெல்லை,

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து திரளான பெண்கள் போராட்டம் நடத்தினார்கள். ஊரக வேலை திட்ட பணியாளர்களுக்கு சம்பளத்தை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மனு கொடுத்தார்கள்.

குறைதீர்க்கும் கூட்டம்

நெல்லை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் கருணாகரன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் குழந்தைவேலு முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் ஏராளமானவர்கள் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, ரேஷன் கார்டு கேட்டு மனு கொடுத்தனர்.

பெண்கள் போராட்டம்

கடையம் அருகே உள்ள பாப்பான்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட துணை செயலாளர் பெரும்படையார் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்திருந்தனர். அங்கு பெண்கள் அனைவரும் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்கனி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சுப்பையா, மகாலட்சுமி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனுவை கொடுத்தனர்.

சம்பளம் வழங்க வேண்டும்

அந்த மனுவில், “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் வேலை செய்தவர்களுக்கு 3 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை. அந்த சம்பளத்தை உடனே வழங்க வேண்டும். ஊரக வேலைதிட்டத்தில் 100 நாள் வேலையை 150 நாட்களாக உயர்த்தி தினமும் ரூ.200 சம்பளம் வழங்க வேண்டும். நெல்லை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். சேனை, சிறுகிழங்கு, வாழை, மஞ்சள் ஆகிய பயிர்கள் தண்ணீரின்றி கருகிவிட்டதால் விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும். பாப்பான்குளத்தில் இருந்து ஆழ்வார்குறிச்சி செல்லும் இணைப்புச் சாலையை உடனே சீரமைக்க வேண்டும். விவசாய தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும்“ என்று கூறி உள்ளனர்.

முற்றுகை போராட்டம்

நெல்லை அருகே உள்ள பாலாமடை பஞ்சாயத்துக்கு உட்பட்ட பாலாமடை, கல்குறிச்சி, கிராமத்தைச் சேர்ந்த பெண்களும், களக்காடு அருகே உள்ள படலையார்குளத்தைச் சேர்ந்த பெண்களும் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்திருந்தனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் தங்களுக்கு தொடர்ந்து வேலை வழங்கவேண்டும் என்று கூறி அடையாள அட்டைகளுடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாவட்ட செயலாளர்கள் கரிசல் சுரேஷ், சுந்தர், நிர்வாகிகள் பாஸ்கர், மனோ, நடராஜன், முத்துவழவன் ஆகியோர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், “ஏர்வாடி கோவில் தெருவைச் சேர்ந்த செந்தில்வேல் என்பவரை தாக்கிய போலீஸ் அதிகாரிகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறி உள்ளனர்.

காலிகுடங்களுடன் வந்தனர்

ராதாபுரம் அருகே சமூகரெங்கபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராம மக்கள் தங்கள் பகுதியில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என்று கூறி காலிகுடங்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர்.

பாரதீய ஜனதா கட்சியின் நெல்லை மாவட்ட விவசாய அணி தலைவர் முத்துராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் ரத்தினராஜ் ஆகியோர் தலைமையில் விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், தென்காசி, ஆலங்குளம், சங்கரன்கோவில், கடையநல்லூர், வாசுதேவநல்லூர் பகுதிகளில் மழை பெய்யாததால் விவசாயிகள் நெல் நடவு செய்யவில்லை. எனவே அவர்களுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்கவேண்டும். பயிர்காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகையை உடனே வழங்கவேண்டும்“ என்று கூறியுள்ளனர்.

விவசாயக்கடன் தள்ளுபடி

நாம் தமிழர் கட்சியினர் நெல்லை மாவட்ட செயலாளர் அப்துல்மாலிக் தலைமையில் கொடுத்த மனுவில், “மழை பொய்த்துவிட்டதால் விவசாயிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே நெல்லை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து விவசாய கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும்“ என்று கூறி உள்ளனர்.

பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில், இறந்தவர்களின் உடலை தாமதம் இல்லாமல் பிரேத பரிசோதனை நடத்தி உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி நெல்லை மாவட்ட பொது ஜன நலசங்கத்தினர் மனு கொடுத்தனர்.

பாளையங்கோட்டை பெரியார்நகரைச் சேர்ந்தவர்கள் மூக்கையா, சுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் முத்துமாரியம்மன் கோவிலில் தாங்கள் வழிபடுவதை தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளனர். நெல்லை மாவட்டத்தில் உள்ள சீமைக்கருவேல மரங்களை ஐகோர்ட்டு உத்தரவுப்படி அகற்றவேண்டும் என்று கோரி தமிழர் நற்பணி கழக தலைவர் கண்மணி மாவீரன் மனு கொடுத்தார்.

கருகிய உளுந்து பயிர்

விவசாயிகள் பலர் கருகிய உளுந்து பயிருடன் வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், ஊத்துமலை சுற்றுவட்டாரத்தில் உள்ள 25 கிராமங்களில் பயிரிடப்பட்ட உளுந்து பயிரானது கருகிவிட்டது. எனவே விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்கவேண்டும். பயிர்காப்பீடு செய்த விவசாயிகளுக்கு 100 சதவீதம் இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும். மீன் பிடி தடைகாலத்தில் மீனவர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் வழங்குவது போல் விவசாய குடும்பங்களுக்கும் அடுத்து விவசாயம் தொடங்கும் வரை ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்“ என்று கூறி உள்ளனர். திருவேங்கடம் அருகே உள்ள மருதன்கிணறு ஆவுடையாள்புரம் கிராம மக்கள், தங்கள் ஊரில் சுடுகாட்டுக்கு சாலை வசதி கேட்டு மனு கொடுத்தனர்.

மகளிர் குழு கடன்

தலித் பெண்கள் எழுச்சி இயக்கத்தினர் கொடுத்த மனுவில், “மகளிர் குழு மூலமாக எங்களுக்கு சிறுகடன் கொடுத்த தனியார் நிதி நிறுவனங்களுக்கு நாங்கள் கடன் தொகையை திருப்பி செலுத்தி வருகிறோம். தற்போது ஏற்பட்டுள்ள பணத்தட்டுப்பாடு காரணமாக எங்களுக்கு பீடிக்கடைகளில் 2 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் நாங்கள் பெரும் அவதிப்பட்டு வருகிறோம். எனவே நாங்கள் வாங்கிய மகளிர் குழு கடன் தொகையை, பணப்பிரச்சினை சரியாகும் வரை வசூல் செய்வதை நிறுத்த வேண்டும்“ என்று கூறி உள்ளனர்.

திராவிட மக்கள் விடுதலை கட்சி மாவட்ட செயலாளர் வெண்ணிமுத்து கொடுத்த மனுவில், ஆலங்குளம் தாலுகா வெங்கடேஷ்வரபுரம் அருந்ததியர் தெரு அருகில் வசிக்கும் நரிகுறவர்கள் குடும்பத்தினருக்கு குடிநீர் வசதி செய்து தரவேண்டும். நெல்லை மாவட்டதில் வறட்சி நிலவுவதால் விவசாயிகள் வாங்கிய டிராக்டர் கடனை தள்ளுபடி செய்யவேண்டும். தனிநபர் கழிப்பறை கட்டியவர்களுக்கு அரசு மானியத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்“ என்று கூறப்பட்டுள்ளது.

செங்கோட்டை அருகே உள்ள வடகரையை சேர்ந்த சுந்தரி கொடுத்த மனுவில், தனது நிலத்தை ஆக்கிரமித்தவர்களிடம் அதை மீட்டு தரவேண்டும் என்று கூறி கதறி அழுதபடி மனு கொடுத்தார்.

முன்னாள் எல்லை பாதுகாப்பு படைவீரர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர். அப்போது அவர்களுக்கும், சிலருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே போலீசார் விரைந்து வந்து இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

Next Story