கிணற்றில் மூழ்கி இறந்த மாணவர்களின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகை


கிணற்றில் மூழ்கி இறந்த மாணவர்களின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகை
x
தினத்தந்தி 19 Dec 2016 11:00 PM GMT (Updated: 2016-12-20T02:40:11+05:30)

கிணற்றில் மூழ்கி இறந்த மாணவர்களின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகை

தூத்துக்குடி,

எட்டயபுரம் அருகே பள்ளிக்கூட தோட்டத்திற்கு தண்ணீர் ஊற்றச் சென்ற 2 மாணவர்கள் கிணற்றில் தவறி விழுந்து இறந்தனர். இருவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

2 மாணவர்கள் பலி

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள அருணாசலபுரத்தை சேர்ந்தவர் பெத்துராஜ். இவருடைய மகன் சூர்யா(வயது 13). அதே பகுதியை சேர்ந்த தமிழ்செல்வம் மகன் சேர்மத்துரை(13). இவர்கள் இருவரும் கீழஈராலில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் 8-ம் வகுப்பு படித்து வந்தனர்.

நேற்று முன்தினம் பள்ளிக்கூட வளாகத்தில் உள்ள செடிகளுக்கு இருவரும் தண்ணீர் ஊற்றுவதற்காக சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக அங்கு உள்ள கிணற்றில் விழுந்து மாணவர்கள் இருவரும் பரிதாபமாக இறந்தனர். அவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டது.

ஆஸ்பத்திரியை முற்றுகை

நேற்று காலை இரு மாணவர்களின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதனால் பிரேத பரிசோதனை செய்யும் இடத்தின் அருகே மாணவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் அர்ச்சுணன், மாநகர செயலாளர் ராஜா மற்றும் நிர்வாகிகள் தலைமையில் திரண்டு இருந்தனர். அவர்கள் பள்ளிக்கூட நிர்வாகி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களுக்கு அரசு நிவாரணம் மற்றும் பள்ளிக்கூடம் சார்பிலும் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி திடீரென உடலை வாங்க மறுத்து ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட் டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்த தகவல் அறிந்ததும் எட்டயபுரம் தாசில்தார் பாக்கியலட்சுமி, விளாத்திகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு தர்மலிங்கம், உதவி கல்வி அலுவலர் முத்தம்மாள் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பள்ளிக்கூட நிர்வாகி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களுக்கு அரசு நிவாரணம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து உறவினர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு மாணவர்களின் உடலை பெற்றுச் சென்றனர். இந்த போராட்டம் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story