தூத்துக்குடி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை


தூத்துக்குடி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 19 Dec 2016 11:00 PM GMT (Updated: 2016-12-20T02:40:10+05:30)

தூத்துக்குடி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தை வறட்சி பாதித்த பகுதியாக அறிவித்து, நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ரவிகுமாரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

மக்கள் குறைதீர்க்கும் நாள்

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ரவிகுமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொது மக்களிடம் மனுக்கள் பெறப்பட்டன.

அப்போது தூத்துக்குடி மாவட்ட தாமிரபரணி நதிநீர் பாதுகாப்பு பேரவை அமைப்பாளர் நயினார் குலசேகரன் தலைமையில் கொடுக்கப்பட்ட மனுவில்,‘ ஸ்ரீவைகுண்டம் அணையில் தூர்வாரப்பட்ட இடங்களில், தற்போது கொங்கராயன்குறிச்சி ஆற்று பகுதியில் இருந்த மணல் மற்றும் அமலை செடிகள் அனைத்தும் தண்ணீரில் அடித்துவரப்பட்டு தேங்கியுள்ளன. இதனால் அணை தூர்வாரியும் பயன் இல்லாமல் உள்ளது. இதனை சரிசெய்ய, கொங்கராயன்குறிச்சியில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகம் உதவ வேண்டும், என கூறப்பட்டு இருந்தது.

வறட்சி மாவட்டமாக...

நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு கொடுத்த மனுவில், ‘ மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி பாசன குளங்கள், மானாவாரி குளங்கள், கால்நடைகளின் மேய்ச்சல் நிலங்களில் படர்ந்து இருக்கும் சீமைக்கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பருவமழை பொய்த்ததால் கடும் வறட்சி நிலவுகிறது. எனவே, தூத்துக்குடியை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதுடன், விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். விளாத்திகுளம் பகுதிகளில் சரள் மணல் அள்ள அனுமதி பெற்றுவிட்டு, வைப்பாற்று மணல் முறைகேடாக அள்ளப்பட்டு வருகிறது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே திட்டமிட்டப்படி கிழக்கு கடற்கரை சாலை அமைக்கும் திட்டத்தை, புன்னக்காயல், காயல்பட்டினம், திருச்செந்தூர் வழியாக நெடுஞ்சாலை துறை செயல்படுத்த வேண்டும், என்று கூறி இருந்தார்.

ஆக்கிரமிப்பு

தூத்துக்குடி மாவட்ட முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மச்சேந்திரன் கொடுத்த மனுவில், ‘ பேய்குளம்- பெருங்குளம் சாலையில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து உள்ளதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பொதுமக்களின் நலன் கருதி, சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என்று கூறி இருந்தார்.

செங்கல்சூளை...

வாழவல்லான் செங்கல் சூளை உரிமையாளர்கள் சங்க தலைவர் பேச்சிமுத்து கொடுத்த மனுவில், வாழவல்லான் பகுதியில் ஏராளமான செங்கல் சூளைகள் உள்ளன. மாவட்ட நிர்வாகத்துக்கு ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் செலுத்தி மணல் அள்ளி தொழில் செய்ய சட்டம் இயற்றப்பட்டது. தற்போது அதிகாரிகள், பணம் கட்டி மணல் அள்ள, தாசில்தார், வட்ட வருவாய்ஆய்வாளர் மற்றும் சுற்றுசூழல் ஆணையத்திடம் இருந்து தடையில்லா சான்று வேண்டும் என்று கேட்கிறார்கள்.

அந்த சான்று பெற சுமார் ரூ.2 லட்சம் வரை தேவை படுகிறது. கால நேரமும் அதிகமாகிறது. இதனால் தொழில் பாதிக்கப்படுகிறது. நாங்கள் ரூ.5 ஆயிரம் கட்டிய இடங்களில் சான்று இல்லாமல் மணல் அள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி தர வேண்டும், என்று கூறி உள்ளார்.

நிவாரண உதவி

தூத்துக்குடி கே.பி.தளவாய் புரத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கொடுத்த மனுவில், ‘எங்கள் பகுதியில் உளுந்து, பாசி, கம்பு, சோளம், பருத்தி பயிர்கள் பயிர் செய்து வருகிறோம். இந்த ஆண்டு மழை இல்லாததால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் எங்களுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டு உள்ளது. விவசாயிகளின் நலன் கருதி வறட்சி நிவாரணம் வழங்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும், என்று கூறி இருந்தனர்.

கருகிய பயிர்களுடன் விவசாயிகள்

ஸ்ரீவைகுண்டம் செக்காரக்குடி பகுதியை சேர்ந்த விவசாயிகள் கருகிய பயிர்களுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தனர். அவர்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் உளுந்து, பாசி, மக்காச்சோளம், எள், பருத்தி, மல்லி போன்றவை பயிர் செய்யப்பட்டு இருந்தன. பருவ மழை பொய்த்ததால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. எங்கள் பகுதியை வறட்சி பகுதியாக அறிவித்து எங்களுக்கு நிவாரண உதவி வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறி இருந்தனர்.

Next Story