மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: குரும்பூர் சர்க்கரை ஆலையை திறக்கக்கோரி கரும்பு விவசாயிகள் கலெக்டரிடம் மனு


மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: குரும்பூர் சர்க்கரை ஆலையை திறக்கக்கோரி கரும்பு விவசாயிகள் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 19 Dec 2016 10:45 PM GMT (Updated: 2016-12-20T02:42:02+05:30)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: குரும்பூர் சர்க்கரை ஆலையை திறக்கக்கோரி கரும்பு விவசாயிகள் கலெக்டரிடம் மனு

புதுக்கோட்டை,

குரும்பூர் சர்க்கரை ஆலையை திறக்க கோரி புதுக்கோட்டையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கரும்பு விவசாயிகள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று கொண்டார்.

வீட்டுமனை பட்டாக்கோரி மனு

கூட்டத்தில் கந்தர்வகோட்டை கீழத்தெரு பகுதியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட பெண்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் நாங்கள் 40 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். நாங்கள் அதிக வாடகை கொடுத்து வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். இதனால் நாங்கள் பல கஷ்டங்களை அனுபவித்து வருகிறோம். எங்களது பெயரில் எந்த நிலமும் கிடையாது. எனவே எங்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

இதைப்போல கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் செங்கோல் கொடுத்த மனுவில், கறம்பக்குடி தாலுகாவில் முள்ளங்குறிச்சி தெற்கு வட்டம், வடக்கு வட்டம், திரு மணஞ்சேரி பள்ளித்திகாடு ஆகிய பகுதிகளில் சுமார் 200 ஏக்கர் வாழை பயிரிடப்பட்டு உள்ளது. இந்த பகுதிகளில் பயிர் காப்பீடு பதிவு செய்வதற்கு அனுமதி இல்லை என வங்கிகளில் சொல்கின்றனர். கூட்டுறவு தொடக்க வேளாண்மை வங்கியும் பதிவு செய்ய மறுக்கின்றனர். எனவே கலெக்டர் விடுபட்ட பகுதிகளில் பயிர் காப்பீட்டிற்கு பதிவு செய்ய அனுமதி வழங்க வங்கிகளுக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

சர்க்கரை ஆலையை திறக்க வேண்டும்

எங்கள் பகுதிகளில் பல ஏக்கரில் கரும்பு சாகுடி செய்யப்பட்டு உள்ளது. நாங்கள் விளைவிக்கும் கரும்புகளை அறந்தாங்கி தாலுகா, குரும்பூரில் உள்ள சர்க்கரை ஆலைக்கு அனுப்பி வருகிறோம். மேற்படி குரும்பூர் சர்க்கரை ஆலை ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் திறக்கபட்டு சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. ஆனால் இந்த ஆண்டு குரும்பூர் சர்க்கரை ஆலை வருகிற ஜனவரி மாதம் 20-ந் தேதிக்கு மேல்தான் திறக்கப்படும் என தெரியவந்து உள்ளது.

இதனால் நாங்கள் பல ஏக்கரில் பயிரிடப்பட்டு உள்ள கரும்புகள் அனைத்தும் பூ பூத்து, நீர்சத்து குறைந்தும், கருகியும் வீணாகி போய்விடும். கரும்பு பயிரிடப்பட்டு ஒரு ஆண்டிற்குள் அதனை அறுவடை செய்துவிட வேண்டும். அறுவடை காலம் தவறிவிட்டால் பயிரிடப்பட்ட கரும்புகள் அனைத்தும் வீணாகிவிடும். மேலும் தற்பொழுது மழை இல்லாத காரணத்தால் கரும்புகள் விரைவில் கருகிவிடும் நிலை உள்ளது. எனவே குரும்பூர் சர்க்கரை ஆலையை இந்த மாதத்தில் (டிசம்பர்) திறக்க கலெக்டர் கணேஷ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

Next Story