தூத்துக்குடி மாவட்டத்தில் நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்கள் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் ரவிகுமார் தகவல்


தூத்துக்குடி மாவட்டத்தில் நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்கள் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் ரவிகுமார் தகவல்
x
தினத்தந்தி 20 Dec 2016 8:00 PM GMT (Updated: 2016-12-21T00:36:20+05:30)

தூத்துக்குடி மாவட்டத்தில் நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்கள் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ரவிகுமார் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– ஓய்வூதியம் தமிழ்நாட்டில் விளையாட்டுத் துறையில்

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்கள் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ரவிகுமார் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

ஓய்வூதியம்

தமிழ்நாட்டில் விளையாட்டுத் துறையில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்று, தற்போது நலிந்த நிலையில் உள்ளவர்களுக்கு ஓய்வூதிய உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் தமிழ்நாட்டின் சார்பில் பங்கேற்று இருக்க வேண்டும். தேசிய அளவிலான போட்டிகளில் முதல், 2–வது, 3–வது இடம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பள்ளி, கல்லூரி காலங்களில் சாதனை படைத்தவர்கள் மட்டுமே தகுதி பெறுவர். அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு சங்கங்களினால் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு இருக்க வேண்டும். முதியோருக்கான போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள், இந்த திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற முடியாது.

விண்ணப்பதாரர் 1.4.2016 அன்று 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் மாத வருமானம் ரூ.6 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரால் சான்றொப்பமிடப்பட்ட விளையாட்டு சான்றிதழ் நகல்கள், வருமான சான்று நகல், வயதுக்கான சான்று நகல் ஆகியவை கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும். மத்திய அரசின் விளையாட்டு வீரருக்கான ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் மத்திய, மாநில அரசின் கீழ் ஓய்வூதியம் பெறுவோர் இந்த திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற முடியாது.

விண்ணப்பிக்கலாம்

ஓய்வூதிய படிவத்தை எந்த சூழ்நிலையிலும், எந்த அடிப்படையிலும் நிராகரிக்கவோ அல்லது தள்ளுபடி செய்யவோ தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு உரிமை உண்டு.

எனவே தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் அதற்கான விண்ணப்ப படிவத்தை ரூ.10 செலுத்தி “மாவட்ட விளையாட்டு அலுவலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாவட்ட விளையாட்டு அரங்கம், தூத்துக்குடி–1, தொலைபேசி எண்: 0461–2321149“ என்ற முகவரியில் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 31–1–17–க்குள் மேற்கண்ட முகவரியில் ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் ரவிகுமார் தெரிவித்து உள்ளார்.


Next Story