திருச்செந்தூரில், தங்கும் விடுதியில் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் தூக்குப்போட்டு தற்கொலை


திருச்செந்தூரில், தங்கும் விடுதியில் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 20 Dec 2016 7:09 PM GMT (Updated: 2016-12-21T00:39:55+05:30)

திருச்செந்தூர் தனியார் விடுதியில் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். முன்னாள் பஞ்சாயத்து தலைவர் நெல்லை பாளையங்கோட்டை சாந்தி நகரை சேர்ந்தவர் சந்திரன்(வயது 44). இவர் கீழநத்தம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஆவார். இவருடைய மனைவ

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் தனியார் விடுதியில் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

முன்னாள் பஞ்சாயத்து தலைவர்

நெல்லை பாளையங்கோட்டை சாந்தி நகரை சேர்ந்தவர் சந்திரன்(வயது 44). இவர் கீழநத்தம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஆவார். இவருடைய மனைவி வசந்தா(38). இவர்களுக்கு கவுசல்யா(16), செல்வ தர்ஷினி(14), மதுபாலா(12) ஆகிய 3 மகள்கள் உள்ளனர். சந்திரனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்தது. எனவே அவர் மது குடிக்கும் பழக்கத்தை நிறுத்துவதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் அவர் மதுகுடிக்கவில்லை என்று தெரிகிறது.

இதனால் விரக்தி அடைந்த சந்திரன் நேற்று முன்தினம் இரவில் தனது காரில் திருச்செந்தூருக்கு புறப்பட்டு சென்றார். அவருடன் காரின் டிரைவர் வேல்முருகனும் சென்றார். பின்னர் திருச்செந்தூர்–பாளையங்கோட்டை ரோட்டில் உள்ள தனியார் விடுதியில் சந்திரன் வாடகைக்கு அறை எடுத்து தங்கினார். நேற்று காலையில் சந்திரன் தனது டிரைவரை அனுப்பி விட்டார்.

தூக்குப்போட்டு தற்கொலை

பின்னர் சந்திரன் தன்னுடைய அக்காள் மகன் வேல்முருகனிடம் செல்போனில் தொடர்பு கொண்டு, தனக்கு வேட்டி, சட்டை எடுத்து வருமாறு கூறினார். இதுகுறித்து வேல்முருகன், சந்திரனின் தம்பி உலகநாதனிடம் கூறி உள்ளார். உடனே உலகநாதன் தன்னுடைய அண்ணன் சந்திரன் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். ஆனால் சந்திரன் செல்போனை எடுத்து பேசவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த உலகநாதன் மற்றும் சந்திரனின் குடும்பத்தினர் திருச்செந்தூர் விடுதிக்கு மதியம் விரைந்து சென்றனர். அங்கு சந்திரன் தங்கியிருந்த அறையில் உள் பக்கமாக கதவு பூட்டி இருந்தது. நீண்ட நேரமாக கதவை தட்டியும் திறக்காததால், கதவை உடைத்து திறந்தனர். அப்போது சந்திரன் மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்து அலறினர்.

கடிதம் சிக்கியது

இதுகுறித்து தகவல் அறிந்ததும், திருச்செந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆடிவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். சந்திரனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சந்திரன் தற்கொலை செய்வதற்கு முன்னதாக, விடுதி அறையில் கடிதம் எழுதி வைத்து உள்ளார். அதனை போலீசார் கைப்பற்றினர். அதில், எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. மன வருத்தத்தில்தான் தற்கொலை செய்து கொண்டேன் என்று எழுதப்பட்டு இருந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்துகொண்ட சந்திரன் கீழநத்தம் பஞ்சாயத்தில் கடந்த 2001–ம் ஆண்டு முதல் 3 முறை தொடர்ந்து பஞ்சாயத்து தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story