பழங்குடியினர் பெண்கள் மீது வனத்துறையினர் அத்துமீறியதாக பதிவான வழக்கு தள்ளுபடி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்


பழங்குடியினர் பெண்கள் மீது வனத்துறையினர் அத்துமீறியதாக பதிவான வழக்கு தள்ளுபடி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 Dec 2016 10:30 PM GMT (Updated: 2016-12-21T00:50:15+05:30)

கடமலைக்குண்டுவை சேர்ந்த பழங்குடியின பெண்கள் மீது வனத்துறையினர் அத்துமீறியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை, மாவட்ட விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு தள்ளுபடி செய்ததை கண்டித்து தேனியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வழக்கு தள்ளுபடி த

தேனி

கடமலைக்குண்டுவை சேர்ந்த பழங்குடியின பெண்கள் மீது வனத்துறையினர் அத்துமீறியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை, மாவட்ட விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு தள்ளுபடி செய்ததை கண்டித்து தேனியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வழக்கு தள்ளுபடி

தேனி மாவட்டம், கடமலைக்குண்டு பகுதியை சேர்ந்த மலைவாழ் பழங்குடியின பெண்கள் சுருளி அருவி அருகே வனப்பகுதியில் தேன் சேகரிக்க சென்ற போது வனத்துறையினர் அத்துமீறியதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பரபரப்பான குற்றச்சாட்டு கூறப்பட்டது. இதுதொடர்பாக பழங்குடியின பெண்கள் கொடுத்த புகாரின் பேரில் ராயப்பன்பட்டி போலீஸ் நிலையத்தில் வனத்துறை அதிகாரிகள் மற்றும் வன ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பழங்குடியின மக்களுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சியனரும் தொடர்ந்து போராட்டங்களை நடத்தினர்.

தேசிய பழங்குடியினர் நல ஆணையமும் இதுதொடர்பாக தேனி மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டுவிடம் நேரில் விளக்கம் கேட்டது. பாலியல் தொந்தரவு மற்றும் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தேனி மாவட்ட விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவால் இந்த வழக்கு உண்மைக்கு புறம்பானது என்று கூறி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கண்டன ஆர்ப்பாட்டம்

மேலும், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட சில வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இதனை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தேனியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு தேனி பாராளுமன்ற தொகுதி செயலாளர் தமிழ்வாணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் நாகரத்தினம், ரவி, மாவட்ட பொருளாளர் ரபீக், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் வெங்கடேசன் மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர்.

ஆர்ப்பாட்டத்தின் போது, தேனி மாவட்டத்தில் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு திருத்த சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் தள்ளுபடி செய்வதை கண்டித்தும், தள்ளுபடி செய்த வழக்குகளுக்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.


Next Story