தேனி அருகே, வரகு அரிசி சமைத்து சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு வாந்தி–மயக்கம்


தேனி அருகே, வரகு அரிசி சமைத்து சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு வாந்தி–மயக்கம்
x
தினத்தந்தி 20 Dec 2016 10:15 PM GMT (Updated: 20 Dec 2016 7:20 PM GMT)

தேனி அருகே வரகு அரிசி சமைத்து சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு வாந்தி–மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். வாந்தி–மயக்கம் தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (வயது 31). இவர் மாவட்ட நிர்வாக

தேனி,

தேனி அருகே வரகு அரிசி சமைத்து சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு வாந்தி–மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

வாந்தி–மயக்கம்

தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (வயது 31). இவர் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் தேனி மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக இவர் தனது குடும்பத்தினருடன் தேனி அருகே உள்ள கொடுவிலார்பட்டியில் வசித்து வருகிறார்.

நேற்று முன்தினம் இவருடைய வீட்டில் வரகு அரிசியை சமைத்தனர். இதனை பாலசுப்பிரமணி, அவருடைய தந்தை பையப்பன் (57), தாயார் கொண்டம்மாள் (52) ஆகியோர் சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்ட சிறிது நேரத்தில் இவர்களுக்கு தலைசுற்றல் ஏற்பட்டு, வாந்தி–மயக்கம் ஏற்பட்டு உள்ளது.

மருத்துவமனையில் அனுமதி

இதையடுத்து அவர்கள் 3 பேரும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களை டாக்டர் பரிசோதனை செய்த போது சாப்பிட்ட உணவு விஷத்தன்மையாகி இருக்கலாம் என்று கூறியுள்ளனர். தொடர்ந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் தேனி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் சுகுணா தலைமையில், தேனி நகர உணவு பாதுகாப்பு அலுவலர் பாண்டியராஜ் மற்றும் ஆண்டிப்பட்டி, போடி பகுதிக்கான உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அடங்கிய குழுவினர் பாலசுப்பிரமணியின் வீட்டுக்கு சென்று சமைக்க பயன்படுத்திய வரகு அரிசியை பார்வையிட்டனர். அந்த அரிசியை கைப்பற்றி அதில் இருந்து மாதிரி எடுத்து ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும், சிகிச்சை பெற்று வரும் பாலசுப்பிரமணி உள்ளிட்டோரையும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேரில் சந்தித்து விவரங்களை சேகரித்தனர்.

கடையில் சோதனை

அப்போது அவர்கள் தேனியில் உள்ள ஒரு அரிசி கடையில் இந்த வரகு அரிசியை வாங்கியதாக தெரிவித்தனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட அரிசி கடைக்கு சென்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கிருந்த வரகு அரிசி மாதிரியும் சேகரிக்கப்பட்டு, ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தேனி நகர உணவு பாதுகாப்பு அலுவலர் பாண்டியராஜிடம் கேட்ட போது, ‘பாதிக்கப்பட்டவர்கள் கடந்த 15–ந்தேதி வரகு அரிசியை வாங்கி உள்ளனர். அதனை நேற்று முன்தினம் சமைத்துள்ளனர். அதற்கு தட்டைப் பயறு குழம்பு வைத்து சாப்பிட்டுள்ளனர். இந்த அரிசியின் மாதிரி எடுத்து ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது’ என்றார்.


Next Story