கூடலூரில் உதவித்தொகை பெற வங்கிகளில் குவிந்த முதியவர்கள் பணம் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிய பரிதாபம்


கூடலூரில் உதவித்தொகை பெற வங்கிகளில் குவிந்த முதியவர்கள் பணம் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிய பரிதாபம்
x
தினத்தந்தி 20 Dec 2016 10:30 PM GMT (Updated: 2016-12-21T01:41:36+05:30)

உதவித்தொகை பெறுவதற்காக கூடலூர் வங்கிகளில் முதியவர்கள் குவிந்தனர். பலர் பணம் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். வங்கிகளில் உதவித்தொகை தமிழக அரசு ஆதரவற்ற முதியோர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கி வருகிறது. கடந்த 10 மாதங்களுக்கு முன்

கூடலூர்

உதவித்தொகை பெறுவதற்காக கூடலூர் வங்கிகளில் முதியவர்கள் குவிந்தனர். பலர் பணம் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

வங்கிகளில் உதவித்தொகை

தமிழக அரசு ஆதரவற்ற முதியோர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கி வருகிறது. கடந்த 10 மாதங்களுக்கு முன்பு வரை தபால் நிலையம் மூலம் உதவித்தொகை வழங்கப்பட்டு வந்தது. இதனால் அந்தந்த பகுதியில் உள்ள தபால் நிலையங்கள் மூலம் முதியவர்கள் உதவித்தொகையை பெற்று வந்தனர். இதில் முதுமை குன்றி உடல் பாதிக்கப்பட்ட முதியோர்களுக்கு தபால் ஊழியர்கள் நேரடியாக சென்று வழங்கி வந்தனர்.

இந்த நிலையில் தற்போது முதியோர் உதவித்தொகை வங்கிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் வங்கிகளுக்கு முதியவர்கள் நேரடியாக சென்று உதவித்தொகையை பெற்று செல்கின்றனர். இதனிடையே கறுப்பு பண ஒழிப்பு நடவடிக்கையாக 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு செல்லாது என கடந்த மாதம் அறிவித்தது. அதற்கு பதிலாக புதிய 500, 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தி உள்ளது. ஆனால் வங்கிகளுக்கு போதிய அளவு பணம் வழங்கப்படாததால் அனைத்து வங்கிகளிலும் பணத்தட்டுப்பாடு நிலவுகிறது.

காத்து கிடக்க வேண்டிய நிலை

கூடலூர் பகுதியில் பெரும்பாலான ஏ.டி.எம். மையங்கள் மூடியே கிடக்கின்றன. மேலும் வங்கிகளுக்கு சென்று பணத்தை எடுக்க பொதுமக்கள் பல மணி நேரம் காத்து கிடக்க வேண்டிய நிலை தொடர்ந்து காணப்படுகிறது. குறிப்பாக தோட்ட தொழிலாளர்கள், ஆதிவாசி மக்கள், வியாபாரிகள் உள்பட அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஏ.டி.எம். மையங்கள் செயல்படாததால் அத்தியாவசிய செலவினங்களுக்காக வங்கிகளுக்கு சென்று பணம் எடுக்க நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்து கிடக்க வேண்டிய நிலை உள்ளது.

தோட்ட தொழிலாளர்கள், ஆதிவாசி மக்கள் வேலைக்கு செல்லாமல் விடுமுறை எடுத்து விட்டு வங்கிகளுக்கு வந்து செல்ல வேண்டிய நிலை காணபபடுகிறது. இந்த நிலையில் பணப்பிரச்சினை காரணமாக முதியோர்களுக்கு கடந்த 2 மாதங்களாக உதவித்தொகை வழங்கப்பட வில்லை. இதனால் கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். இதற்காக சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு தினமும் சென்று உதவி தொகையை கேட்டு வருகின்றனர். ஆனால் பணத்தட்டுப்பாடு காரணமாக உதவித்தொகையை வங்கிகள் வழங்குவது இல்லை.

ஏமாற்றத்துடன் திரும்புகிறார்கள்

இந்த நிலையில் நேற்று கூடலூரில் உள்ள வங்கிகள் முன்பு முதியவர்கள் பலர் உதவித்தொகை பெற காத்து கிடந்தனர். இதனால் வெயிலில் நீண்ட நேரம் நிற்க முடியாமல் பலர் உடல் சோர்வடைந்து தரையில் அமர்ந்து விட்டனர். மேலும் அவர்கள் பணம் கிடைக்காமல் ஏமாற்றுத்துடன் திரும்பிய பரிதாபத்தையும் காண முடிந்தது.

இது குறித்து வரிசையில் காத்திருந்த முதியவர்கள் சிலர் கூறும்போது, பலர் உடல் நிலை சரியில்லாமல் வீட்டில் படுத்த படுக்கையாக கிடக்கின்றனர். இதனால் அவர்களின் உறவினர்கள் வங்கிகளில் வந்து உதவித்தொகையை கேட்டால் வங்கிகள் வழங்க முன்வருவது இல்லை. படுத்து கிடக்கும் முதியவர்களை நேரடியாக அழைத்து வர வேண்டும் என நிர்பந்திக்கின்றனர். அவ்வாறு வங்கிகளுக்கு வந்தாலும் பல மணி நேரம் வெயிலில் காத்து கிடக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் பலர் மயங்கி விழாத குறையாக உடல் சோர்வடைந்து தரையில் உட்கார்ந்து விடுகின்றனர். மேலும் அனைவருக்கும் பணம் கிடைப்பது இல்லை என்று கூறினர்.

ஆதிவாசி பெண்கள்

இது தொடர்பாக ஸ்ரீமதுரை ஊராட்சி காஞ்சிக்கொல்லி ஆதிவாசி பெண்கள் வெள்ளச்சி, கெம்பி ஆகியோர் கூறியதாவது:–

உதவித்தொகையை பெறுவதற்காக 3 நாட்களாக வந்து செல்கிறோம். ஆனால் பணம் இல்லை என கூறி விடுகின்றனர். வங்கிக்கு தினமும் வந்து வரிசையில் நின்றாலும் பணம் கிடைப்பது இல்லை. இதனால் பலர் வங்கிகளுக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டிய நிலையில் உள்ளோம். என்ன செய்வது என தெரிய வில்லை. அதிகாரிகள் தலையிட்டு உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story