ஜெயங்கொண்டம் அருகே 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் சாலை மறியல்


ஜெயங்கொண்டம் அருகே 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 21 Dec 2016 4:30 AM IST (Updated: 21 Dec 2016 2:30 AM IST)
t-max-icont-min-icon

ஜெயங்கொண்டம் அருகே 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் சாலை மறியல்

ஜெயங்கொண்டம்,

ஜெயங்கொண்டம் அருகே 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலைமறியல்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வாரியங்காவல் கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணி நடைபெற்றது. இந்த பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் வேலைக்கான சம்பளத்தினை எடுப்பதற்காக அந்த கிராமத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு சென்றுள்ளனர். ஆனால் ஒருவாரமாக அவர்களுக்கு பணம் வங்கியில் வழங்கப்படவில்லை. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு காரணத்தை கூறி பணம் வழங்கப்படவில்லை. இதே போல் நேற்றும் பணம் எடுக்க வந்தபோது, பணம் வழங்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த தொழிலாளர்கள் வங்கி அருகே உள்ள ஜெயங்கொண்டம்-செந்துறை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் முதியோர் உதவி தொகை பெற வந்தவர்களும் பங்கேற்றனர்.

போக்குவரத்து பாதிப்பு

இது குறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் தலைமையிலான போலீசார் வங்கி அதிகாரிகளை அழைத்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். வங்கி அதிகாரிகள் பணம் உள்ளவரை பட்டுவாடா செய்யப்படும் என்றும், வரிசையாக வருமாறும், ஒரே நேரத்தில் அனைவருக்கும் பணம் வழங்க இயலாது என்றும், உங்களுடைய கோரிக்கையை மேல் அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளோம் என்றும், அதிகமாக பணம்அனுப்பவும் கேட்டுள்ளோம், இன்றே பணம் வந்தால்கூட அனைவருக்கும் பட்டுவாடா செய்யப்படும் என்றும் தெரிவித்தனர். இதனால் அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் ஜெயங்கொண்டம்-செந்துறை சாலையில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story