பாலக்கோடு பகுதியில் தக்காளி 15 கிலோ கூடை ரூ.30-க்கு விற்பனை விலை கடும் வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை


பாலக்கோடு பகுதியில் தக்காளி 15 கிலோ கூடை ரூ.30-க்கு விற்பனை விலை கடும் வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 20 Dec 2016 10:30 PM GMT (Updated: 20 Dec 2016 9:04 PM GMT)

பாலக்கோடு பகுதியில் தக்காளி 15 கிலோ கூடை ரூ.30-க்கு விற்பனை விலை கடும் வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை

பாலக்கோடு,

பாலக்கோடு பகுதியில் தக்காளி 15 கிலோ கொண்ட ஒரு கூடை ரூ.30-க்கு விற்பனையாகிறது. விலை கடும் வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தக்காளி அறுவடை

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு, மாரண்டஅள்ளி, பென்னாகரம், பஞ்சப்பள்ளி, பாப்பாரப்பட்டி, மகேந்திரமங்கலம், காரிமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் தக்காளிகள் பாலக்கோட்டில் உள்ள தக்காளி மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது.

இந்தநிலையில் பாலக்கோடு பகுதியில் தற்போது தக்காளி அறுவடை தொடங்கி உள்ளது. இதனால் மார்க்கெட்டுக்கு நாள் ஒன்றுக்கு சுமார் 10 டன் தக்காளியை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். இங்கு வெளியூர் மற்றும் உள்ளூரை சேர்ந்த வியாபாரிகள் தக்காளிகளை விவசாயிகளிடம் இருந்து வாங்கி பெட்டிகளில் அடைத்து வைத்து வாகனங்கள் மூலம் ஏற்றுமதி செய்கிறார்கள். இங்கிருந்து ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

விவசாயிகள் கவலை

பாலக்கோடு பகுதியில் தக்காளி அறுவடை தொடங்கியதால் கடும் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. தக்காளி 15 கிலோ எடை கொண்ட ஒரு கூடை ரூ.30-க்கும், 30 கிலோ எடை கொண்ட ஒரு கிரேடு(பெட்டி)ரூ.50-க்கும் விற்பனையானது. அதாவது பாலக்கோடு பகுதியில் சில்லறையாக ஒரு கிலோ தக்காளி ரூ.2-க்கு விற்பனையானது. விலை வீழ்ச்சி காரணமாக தக்காளிகளை தோட்டத்தில் இருந்து பறிக்காமல் விவசாயிகள் அப்படியே விட்டு விடுகின்றனர். பல்வேறு கிராமங்களில் கால்நடைகளை விட்டு மேய்த்து வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், பாலக்கோடு பகுதியில் தக்காளி அறுவடை தொடங்கி உள்ளதால் கடும் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த 5 மாதமாக இதே நிலை தான் நீடித்து வருகிறது. தக்காளியை பறித்து மார்க்கெட்டுக்கு கொண்டு வந்தால் போதிய விலை கிடைப்பது இல்லை. அப்படியே பறித்து கொண்டு வந்தால் ஆட்கள் கூலி, வாகன வாடகைக்கு கூட கட்டுப்படியாகவில்லை.

இதனால் தக்காளியை சாலையோரம் கொட்டி செல்கிறோம். மேலும் கால்நடைகளை விட்டு மேய்த்து வருகிறோம் என விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.


Next Story