நீதிபதியிடம் ஆஜர்படுத்த அழைத்து வந்தபோது கைதி தப்பி ஓட்டம் கும்பகோணத்தில் பரபரப்பு


நீதிபதியிடம் ஆஜர்படுத்த அழைத்து வந்தபோது கைதி தப்பி ஓட்டம் கும்பகோணத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 20 Dec 2016 9:18 PM GMT (Updated: 2016-12-21T02:48:25+05:30)

நீதிபதியிடம் ஆஜர்படுத்த அழைத்து வந்தபோது கைதி தப்பி ஓட்டம் கும்பகோணத்தில் பரபரப்பு

கும்பகோணம்,

நீதிபதியிடம் ஆஜர்படுத்த அழைத்து வந்தபோது கைதி தப்பி ஓடியதால் கும்பகோணத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கார் கண்ணாடி சேதம்

கும்பகோணத்தை அடுத்த திருப்பனந்தாள் கடைவீதியில் நேற்றுமுன்தினம் இரவு ராமானுஜபுரத்தை சேர்ந்த ராயர் மகன் ராஜா(வயது26) மற்றும் அதே பகுதியை சேர்ந்த பாலமுருகன் ஆகிய 2 பேரும் குடிபோதையில் தகராறு செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக காட்டுமன்னார்கோவில் பகுதியை சேர்ந்த ஜியாவுதீன் என்பவர் அவரது காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது ராஜாவும், பாலமுருகனும் சேர்ந்து ஜியாவுதீனின் கார் கண்ணாடியை அடித்து உடைத்து சேதப்படுத்தினர்.

இதுகுறித்து ஜியாவுதீன் திருப்பனந்தாள் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ராஜா, பாலமுருகன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இதையடுத்து கும்பகோணத்தில் உள்ள நீதிமன்றத்தில் ராஜாவையும், பாலமுருகனையும் ஆஜர்படுத்த சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், காசிநாதன் ஆகியோா் அழைத்து வந்தனா். அப்போது இரவு நேரமானதால், நீதிமன்றத்தின் எதிா்புறத்தில் அமைந்துள்ள நீதிமன்ற குடியிருப்பில் உள்ள நீதிபதியிடம் ஆஜா்படுத்த அழைத்து சென்றனர்.

தப்பி ஓட்டம்

அப்போது போலீசாரிடம் இருந்து ராஜா திடீரென தப்பி ஓடினார். அவரை பிடிக்க போலீசார் விரட்டி சென்றனர். ஆனால் ராஜாவை பிடிக்க முடியவில்லை. இது குறித்து கும்பகோணம் கிழக்கு போலீஸ் நிலையத்தில் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், காசிநாதன் ஆகியோர் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ராஜாவை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் கும்பகோணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story