அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு 3-ம் பருவ பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி மும்முரம்


அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு 3-ம் பருவ பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி மும்முரம்
x
தினத்தந்தி 21 Dec 2016 4:30 AM IST (Updated: 21 Dec 2016 2:48 AM IST)
t-max-icont-min-icon

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு 3-ம் பருவ பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி மும்முரம்

தஞ்சாவூர்,

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு 3-ம் பருவ பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

3-ம் பருவ பாடப்புத்தகங்கள்

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள், நோட்டுகள், புத்தகப்பை உள்ளிட்ட 14 வகையான விலையில்லா பொருட்களை தமிழக அரசு வழங்கி வரு கிறது. மேலும் முன்பு மாணவர்களுக்கு ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு பாடப்புத்தகம் வழங்கப்பட்டதால் மாணவர்களுக்கு புத்தகசுமை அதிகமாக இருந்தது. மாணவர் களின் புத்தகசுமையை குறைக்க அரசு முடிவு எடுத்து, ஒரு ஆண்டுக்கு 3 பருவமாக புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

அதாவது காலாண்டு தேர்வு வரை தேவையான புத்தகங்களை முதல் பருவ புத்தகங்கள் என்றும், அரையாண்டு தேர்வு வரையிலான புத்தகங்கள் 2-ம் பருவ புத்தகங்கள் என்றும், அரையாண்டுக்கு பின்னர் இறுதி ஆண்டு தேர்வு வரையிலான புத்தகங்கள் 3-ம் பருவபுத்தகங்கள் என்றும் அழைக்கப்படுகிறது. அவ்வாறு அந்தந்த பருவத்திற்கு பாடப்புத்தகங்கள், நோட்டுகள் ஆகியவை 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கும், அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தேவையான 3-ம் பருவ பாடப்புத்தகங்கள் மாவட்ட கல்வித்துறை சார்பில் அனுப்பும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

84 பள்ளிகள்

தஞ்சை கல்வி மாவட்டத்தில் உள்ள 84 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு தேவையான 3-ம் பருவ பாடப்புத்தகங்கள், நோட்டுகள் தஞ்சை மேம்பாலம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் இருந்து அனுப்பும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த பாடப்புத்தகங்களும், நோட்டுகளும் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து அடுத்தமாதம்(ஜனவரி) 2-ந்தேதி பள்ளிகள் திறந்தவுடன் அன்றே மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட உள்ளது. 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு தொகுதி-1, தொகுதி-2 ஆகிய 2 புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. அதாவது தமிழ், ஆங்கிலப்பாடங்கள் அடங்கிய புத்தகம் தொகுதி-1 ஆகும். கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 3 பாடங்கள் அடங்கிய புத்தகம் தொகுதி-2 ஆகும். 9-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தொகுதி-1, தொகுதி-2, தொகுதி-3 என 3 பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. அதாவது தமிழ், ஆங்கிலப்பாடங்கள் அடங்கியது தொகுதி-1 ஆகும். கணக்குபாடம் மட்டும் அடங்கியது தொகுதி-2 ஆகும். அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்கள் அடங்கியது தொகுதி-3 ஆகும்.

கல்வித்துறை அதிகாரிகள்

இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறும்போது, 6-ம் வகுப்பிற்கு தலா 5 ஆயிரத்து 900 தொகுதி-1, தொகுதி-2 பாடப்புத்தகங் களும், 7-ம் வகுப்பிற்கு தலா 5 ஆயிரத்து 710 தொகுதி-1, தொகுதி-2 பாடப்புத்தகங் களும், 8-ம் வகுப்பிற்கு தலா 6 ஆயிரத்து 40 தொகுதி-1, தொகுதி-2 புத்தகங்களும், 9-ம் வகுப்பிற்கு தலா 8 ஆயிரத்து 562 தொகுதி-1, தொகுதி-2 புத்தகங்களும் அனுப்பி வைக்கப்படுகின்றன. வருகிற 28-ந் தேதிக்குள் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் வரைபடம், நோட்டுகளும் அனுப்பி வைக்கப்படுகின்றன என்றனர். இதேபோல கும்ப கோணம் கல்வி மாவட்டம், பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்திற்குட்பட்ட அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு 3-ம் பருவ பாடப்புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

Next Story