துணைக்கோள் நகரம் அமைக்கும் இடத்தில் போலீஸ், வருவாய் அதிகாரிகளுடன் விவசாயிகள் மோதல்
மதுரை மாவட்டம் தோப்பூர், உச்சப்பட்டி ஆகிய பகுதிகளில் துணைக்கோள்நகரம் அமைக்க தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம் நிலம் கையகப்படுத்தப்பட்டு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் நேற்று உச்சப்பட்டி கிராமத்தின் பின்பகுதியில் உள்ள நிலத்தை சமப்படுத்த
திருமஙகலம்,
மதுரை மாவட்டம் தோப்பூர், உச்சப்பட்டி ஆகிய பகுதிகளில் துணைக்கோள்நகரம் அமைக்க தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம் நிலம் கையகப்படுத்தப்பட்டு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் நேற்று உச்சப்பட்டி கிராமத்தின் பின்பகுதியில் உள்ள நிலத்தை சமப்படுத்த வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் ஜே.சி.பி. எந்திரத்துடன் வந்தனர். தற்போது அந்த நிலப்பகுதி உழுது, பயறு விதைகள் விதைக்கப்பட்டு, பயிர்கள் முளைத்து இருந்தன.
அந்த நிலப்பகுதியை சமப்படுத்த ஜே.சி.பி. எந்திரத்தின் டிரைவர்கள் பணியை மேற்கொண்டனர். இதைப்பார்த்த அந்த நிலத்திற்குரிய விவசாயிகள் ஆத்திரத்துடன் வந்து, நிலத்தில் கிடந்த மண்கட்டிகளை எடுத்து, ஜே.சி.பி. எந்திரங்களின் டிரைவர்களை தாக்க ஓடினர். அப்போது அங்கு பாதுகாப்பிற்கு வந்த போலீசார் விவசாயிகளை தடுத்தனர். உடனே விவசாயிகள் தடை ஆணை பெற்று இருப்பதாக கூறி ஆவேசமாக கூறி, அதற்கான ஆதாரங்களை காண்பித்தனர்.
இதையடுத்து அதிகாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, மோதல் உருவாகும் நிலை ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து போலீசார், விவசாயிகளை எச்சரிக்கை செய்தனர். ஆனாலும் விவசாயிகள் தொடர்ந்து வாக்குவாதம் செய்தனர். சுமார் 1 மணிநேரத்திற்கு பின்பு வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் ஜே.சி.பி. எந்திரத்துடன் திரும்பி சென்றனர்.
இதுகுறித்து வீட்டு வசதி வாரிய அதிகாரி மகேந்திரவர்மாவிடம் கேட்ட போது, 573.83 ஏக்கர் நிலப்பரப்பில் துணைக்கோள் நகரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் குறிப்பிட்ட சிலர் மட்டும் வழக்கு தொடர்ந்து, பணிகளை தடுத்து வருகின்றனர். நில உரிமையாளர்கள் கோரிக்கை குறித்து அரசு தான் முடிவு எடுக்க வேண்டும் என்றார்.