பணிகள் பாதிப்பு குப்பை அள்ளும் வண்டிகளின் டிரைவர்கள் திடீர் போராட்டம்


பணிகள் பாதிப்பு குப்பை அள்ளும் வண்டிகளின் டிரைவர்கள் திடீர் போராட்டம்
x
தினத்தந்தி 20 Dec 2016 10:16 PM GMT (Updated: 20 Dec 2016 10:16 PM GMT)

குப்பை அள்ளும் வண்டிகளின் டிரைவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பணிகள் பாதிக்கப்பட்டன. சம்பளம் வழங்கவில்லை புதுவையில் குப்பை அள்ளும் பணியில் தனியார் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் சுமார் 4,500 பணியாளர்கள் குப்பை அள்ளும் பணியில் 3 ஷிப

புதுச்சேரி

குப்பை அள்ளும் வண்டிகளின் டிரைவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பணிகள் பாதிக்கப்பட்டன.

சம்பளம் வழங்கவில்லை

புதுவையில் குப்பை அள்ளும் பணியில் தனியார் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் சுமார் 4,500 பணியாளர்கள் குப்பை அள்ளும் பணியில் 3 ஷிப்டுகளாக பணியாற்றி வருகின்றனர்.

பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் குப்பைகள் சிறு வண்டிகள் மூலம் சேகரிக்கப்பட்டு ஓரிடத்தில் கொட்டப்படுகிறது. இதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு கடந்த சில மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த மாதத்துக்கான சம்பளமும் இதுவரை வழங்கப்படவில்லை என்று தெரிகிறது.

திடீர் போராட்டம்

இதைக்கண்டித்து குப்பை அள்ளும் வண்டி டிரைவர்கள் நேற்று காலை திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மரப்பாலம் பகுதியில் குப்பை வண்டிகளை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு பணிக்குச் செல்லாமல் புறக்கணித்தனர். இதனால் குப்பை அகற்றும் பணி பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் கிடைத்து அந்த தனியார் நிறுவனத்தின் பொறுப்பாளர்கள் மரப்பாலம் பகுதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது ஊழியர்களுக்கு உடனடியாக சம்பளம் கிடைக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர்.

இதைத்தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு குப்பை அள்ளும் வண்டிகளின் டிரைவர்கள் பணிக்கு திரும்பினார்கள். அதன்பின் குப்பை அள்ளும் பணி வழக்கம்போல் நடந்தது.


Next Story