தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படை போலீஸ் அதிகாரி தகவல்


தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படை போலீஸ் அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 20 Dec 2016 10:55 PM GMT (Updated: 2016-12-21T04:25:02+05:30)

தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்று போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

வண்டலூர்,

தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்று போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

படுகொலை

காஞ்சீபுரம் மாவட்டம் வண்டலூரை அடுத்த ஓட்டேரி விரிவு 7-வது தெருவை சேர்ந்தவர் விஜயராஜ் (வயது 40). இவர் காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. தொண்டர் அணி துணை அமைப்பாளராக இருந்தார். நேற்று முன்தினம் இரவு அவர் தன்னுடைய நிதி நிறுவனம் முன்பு நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு காரில் வந்த மர்ம நபர்கள் திடீரென விஜயராஜ் மீது பெட்ரோல் குண்டு வீசி அரிவாளால் வெட்டி கொன்றனர். இந்த கொலை குறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று வண்டலூர், ஓட்டேரி பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டது. மேலும் ஓட்டேரியில் உள்ள அரசு பள்ளி, தனியார் பள்ளிகள் இயங்கவில்லை. இதனால் ஓட்டேரி பகுதியில் பதற்றம் நிலவுகிறது. அங்கு வண்டலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு முகிலன் தலைமையில் 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

போலீசில் புகார்

கொலை செய்யப்பட்ட விஜயராஜின் உடல் நேற்று மதியம் ஓட்டேரியில் உள்ள அவரது இல்லத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து அவரது உடலுக்கு வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ., காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரன் எம்.எல்.ஏ. உள்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

படுகொலை செய்யப்பட்ட விஜயராஜின் மனைவி முத்தமிழ்ச்செல்வி ஓட்டேரி போலீசில் புகார் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

என்னுடைய கணவர் ரியல் எஸ்டேட் தொழில், நிதி நிறுவனம் நடத்தி வந்தார். வண்டலூர் ஊராட்சி மன்றதலைவர் பதவிக்கு 2 முறை போட்டியிட்டு தோல்வி அடைந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட உள்ளாட்சி தேர்தலில் வண்டலூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு நான் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்தேன். ஆனால் உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

4 தனிப்படை

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட வார்தா புயலால் பாதிக்கப்பட்ட ஓட்டேரி, வண்டலூர் பகுதியில் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதி போன்ற பணிகளை செய்துகொண்டு இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு யாரோ அவரை வெட்டி படுகொலை செய்துவிட்டனர்.

இவ்வாறு அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து உயர் போலீஸ் அதிகாரி கூறியதாவது:-

கொலை செய்யப்பட்ட தி.மு.க. பிரமுகர் விஜயராஜ் மீது ஓட்டேரி போலீசில் 2 கொலை வழக்கு உள்ளது. எதற்காக இந்த கொலை நடந்தது என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும் இந்த கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிப்பதற்கு 4 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. விரைவில் கொலையாளிகளை பிடித்து விடுவோம்.

விஜயராஜ் வெட்டி படுகொலை செய்யப்பட்ட 5-வது தெருவில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம். இதனால் கொலையாளி யார்? என்பது எளிதாக தெரிந்துவிடும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story