கோபால்பட்டியில் ஓய்வு பெற்ற கல்வி அலுவலர் வீட்டில் நகை, பணம் திருட்டு மாற்றுச்சாவியை பயன்படுத்தி காரையும் எடுத்துச்சென்றனர்


கோபால்பட்டியில் ஓய்வு பெற்ற கல்வி அலுவலர் வீட்டில் நகை, பணம் திருட்டு மாற்றுச்சாவியை பயன்படுத்தி காரையும் எடுத்துச்சென்றனர்
x
தினத்தந்தி 22 Dec 2016 3:00 AM IST (Updated: 22 Dec 2016 12:53 AM IST)
t-max-icont-min-icon

கோபால்பட்டியில், ஓய்வு பெற்ற கல்வி அலுவலர் வீட்டில் நகை, பணத்தை திருடிய மர்ம நபர்கள் மாற்றுச்சாவியை பயன்படுத்தி காரையும் எடுத்துச்சென்றுள்ளனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:– ஓய்வு பெற்ற கல்வி அலுவலர் சாணார்பட்டி ஒன்றியம் கோபால்பட்டி ரா

கோபால்பட்டி,

கோபால்பட்டியில், ஓய்வு பெற்ற கல்வி அலுவலர் வீட்டில் நகை, பணத்தை திருடிய மர்ம நபர்கள் மாற்றுச்சாவியை பயன்படுத்தி காரையும் எடுத்துச்சென்றுள்ளனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–

ஓய்வு பெற்ற கல்வி அலுவலர்

சாணார்பட்டி ஒன்றியம் கோபால்பட்டி ராஜலட்சுமி நகரில் வசிப்பவர் சாத்தாவு (வயது 59). இவருடைய மனைவி விஜயலட்சுமி. சாத்தாவு கல்வி அலுவலராக இருந்து ஓய்வு பெற்றவராவார். விஜயலட்சுமி கோபால்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக உள்ளார். இவர்களுக்கு அதே பகுதியில் சொந்தமாக 2 வீடுகள் எதிர் எதிரே உள்ளன. அதில் ஒன்றில் சாத்தாவு குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

மற்றொறு வீட்டில் யாரும் வசிக்கவில்லை. அந்த வீட்டு வளாகத்தில் சாத்தாவு தனது காரை நிறுத்தி வைத்திருந்தார். அந்த வீட்டில் அவர்கள் ஏற்கனவே பயன்படுத்திய பொருட்கள் மற்றும் ரூ.2 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், வெள்ளிப்பொருட்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலையில் விஜயலட்சுமி வீட்டு வளாகத்தில் கோலம் போடுவதற்காக வெளியே வந்தார். அப்போது எதிரே உள்ள மற்றொரு வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் மாயமாகி இருப்பதை பார்த்தார்.

தங்க நகை, வெள்ளிப்பொருட்கள் திருட்டு

இதையடுத்து கணவரிடம் இது குறித்து அவர் தெரிவித்தார். பின்னர் கணவன்–மனைவி இருவரும் அந்த வீட்டிற்கு சென்ற போது கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு திறந்த நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அதையடுத்து உள்ளே சென்று அவர்கள் பார்த்த போது பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. அதில் இருந்த தங்க நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் பணம் திருடு போயிருந்தது. மேலும் பூஜை அறையில் வைக்கப்பட்டிருந்த காரின் மாற்று சாவியும் மாயமாகி இருந்தது அவர்களுக்கு தெரியவந்தது.

அதன் பின்னர் இது குறித்து சாணார்பட்டி போலீஸ் நிலையத்தில் சாத்தாவு புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வீட்டை பார்வையிட்டு விசாரணை செய்தனர். இதற்கிடையே அங்கு வந்த கைரேகை நிபுணர்களும் வீட்டில் பதிவான தடயங்களை சேகரித்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பயன்பாடு இல்லாமல் அந்த வீடு இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இரவு நேரத்தில் உள்ளே புகுந்து நகைகள், பணத்தை திருடியதோடு பூஜை அறையில் இருந்த மாற்று சாவியை பயன்படுத்தி காரையும் திருடிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கோபால்பட்டி அருகே உள்ள மேட்டுக்கடை பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் மாவட்ட கவுன்சிலர் செல்வராஜ் என்பவர் வீட்டில் 50 பவுன் நகை கொள்ளை போன சம்பவத்தில் குற்றவாளிகள் இன்னும் பிடிபடவில்லை. இந்த நிலையில் ஓய்வு பெற்ற கல்வி அலுவலரின் வீட்டில் திருட்டு சம்பவம் நடந்தது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story