பல ஆண்களை திருமணம் செய்து நகை, பணம் மோசடி செய்த பெண் கைது உடந்தையாக இருந்த அக்கா, உறவினரும் சிக்கினர்


பல ஆண்களை திருமணம் செய்து நகை, பணம் மோசடி செய்த பெண் கைது உடந்தையாக இருந்த அக்கா, உறவினரும் சிக்கினர்
x
தினத்தந்தி 22 Dec 2016 3:45 AM IST (Updated: 22 Dec 2016 12:53 AM IST)
t-max-icont-min-icon

பல ஆண்களை திருமணம் செய்து நகை, பணம் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். மேலும் இதற்கு உடந்தையாக இருந்த அக்கா மற்றும் உறவினரும் சிக்கினர். வியாபாரி எர்ணாகுளத்தை அடுத்துள்ள வெற்றிலா பொன்னூர் பகுதியில் தங்கியிருந்து வியாபார தொழில் செய்து வருபவர் கு

எர்ணாகுளம்

பல ஆண்களை திருமணம் செய்து நகை, பணம் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். மேலும் இதற்கு உடந்தையாக இருந்த அக்கா மற்றும் உறவினரும் சிக்கினர்.

வியாபாரி

எர்ணாகுளத்தை அடுத்துள்ள வெற்றிலா பொன்னூர் பகுதியில் தங்கியிருந்து வியாபார தொழில் செய்து வருபவர் குஜராத் மாநிலத்தை சேர்ந்த லெனின்ஜிதேந்திரா. இவர் எர்ணாகுளம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில், மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் பகுதியை சேர்ந்த மேகாபார்கவி (வயது 27) என்ற பெண் தன்னை திருமணம் செய்தார்.

பின்னர் சில நாட்கள் தன்னுடன் வாழ்ந்து விட்டு தன்னிடம் இருந்த ரூ.15 லட்சம் மற்றும் 25 பவுன் தங்கநகைகளை எடுத்து கொண்டு மாயமாகி விட்டார். நகை, பணத்துக்காக ஆசைப்பட்டு அவர், திட்டமிட்டே என்னை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். இதற்கு அவருடைய அக்கா பிராச்சிபார்கவி (29), உறவினர் தேலேஷ் சர்மா (32) ஆகியோரும் உடந்தையாக இருந்தனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை தேடி வந்தனர். இதற்கிடையில் மத்திய பிரதேச மாநிலம் நொய்டா பகுதியில் அவர்கள், பதுங்கி இருப்பதாக போலீசுக்கு தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்தனர். பின்னர் உள்ளூர் போலீசார் உதவியுடன், 3 பேரையும் கைது செய்து எர்ணாகுளத்திற்கு அழைத்து வந்தனர்.

தலைமறைவு

பின்னர் இதுகுறித்து அவர்கள் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் கூறியதாவது:–

கைது செய்யப்பட்ட 3 பேரில், மேகாபார்கவி வசதியானவர்களை அணுகி தங்களை திருமணம் செய்து கொள்வதாக வசியப்படுத்துவாராம். குறிப்பாக பணக்கார குடும்பத்தில் உள்ள மாற்றுத்திறன் கொண்ட இளைஞரை திருமணம் செய்து கொள்வதாக கூறுவாராம். அப்போது தான் எளிதாக மோசடி செய்யலாம் என்பது இவரது திட்டம்.

திருமணம் முடிந்தவுடன் வீட்டில் உள்ள நகை, பணத்தை எடுத்து கொண்டு மேகாபார்கவி தலைமறைவாகி விடுவாராம். இதுபோன்று தான் எர்ணாகுளம் வெற்றிலா பகுதியை சேர்ந்த லெனின் ஜிதேந்திராவுடன் 15 நாட்கள் வாழ்ந்து விட்டு நகை, பணத்துடன் மேகாபார்கவி மாயமாகி விட்டார்.

உல்லாசம்

இதேபோல் சத்தீஸ்கர் மாநிலத்தை சோந்த ராஜேஷ் கோலேஜா என்பரிடம் ரூ.90 லட்சமும், குஜராத் மாநிலம் சூரத் பகுதியை சேர்ந்த ஹேமந்த்குமார் என்பவரிடம் ரூ.13 லட்சமும், ராஜஸ்தான் மாநிலம் ஜோட்பூர் பகுதியை சேர்ந்த சஜேந்திரராஷ் என்பவரிடம் ரூ.15 லட்சமும், சூரத் பகுதியை சேர்ந்த அருண்குமார் என்பவரிடம் ரூ.10 லட்சமும் மோசடி செய்துள்ளார். இதுபோல பல ஆண்களை அவர் திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

ஒவ்வொருவரிடமும் திருமணம் முடிந்து 15 நாட்கள் மேகாபார்கவி உல்லாசமாக இருப்பாராம். இதையடுத்து வீட்டில் உள்ள நகை, பணத்தை எடுத்து கொண்டு அக்காவுக்கு உடல்நிலை சரியில்லை, பார்த்து விட்டு வருவதாக கூறி விட்டு தலைமறைவாகி விடுவார். இந்த மோசடிக்கு உடந்தையாக அவளது அக்கா பிராச்சிபார்கவி, உறவினர் தேலேஷ்சர்மா ஆகியோர் இருந்துள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பின்னர் கைது செய்யப்பட்ட 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story