விழுப்புரம் தி.மு.க. நகர செயலாளர் கொலையில் கைதான 4 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு


விழுப்புரம் தி.மு.க. நகர செயலாளர் கொலையில் கைதான 4 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 22 Dec 2016 4:00 AM IST (Updated: 22 Dec 2016 1:36 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் தி.மு.க. நகர செயலாளர் கொலையில் கைதான 4 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். தி.மு.க. நகர செயலாளர் கொலை விழுப்புரம் கே.கே.சாலை கணபதி லே–அவுட்டில் வசித்து வந்தவர் செல்வராஜ் (வயது 44). விழுப்புரம் நகர தி.மு.க. செயலாளரான இவர் க

விழுப்புரம்,

விழுப்புரம் தி.மு.க. நகர செயலாளர் கொலையில் கைதான 4 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தி.மு.க. நகர செயலாளர் கொலை

விழுப்புரம் கே.கே.சாலை கணபதி லே–அவுட்டில் வசித்து வந்தவர் செல்வராஜ் (வயது 44). விழுப்புரம் நகர தி.மு.க. செயலாளரான இவர் கடந்த செப்டம்பர் மாதம் 14–ந் தேதி காலை தனது ஆதரவாளர்கள் சிலருடன் விழுப்புரம் வடக்கு ரெயில்வே காலனி குடியிருப்பு பகுதியில் நடைபயிற்சியில் ஈடுபட்டார். அப்போது அங்கு வந்த கும்பல், செல்வராஜை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது.

இதுகுறித்து விழுப்புரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் விழுப்புரம் விராட்டிக்குப்பம் பாதையை சேர்ந்த ரவுடி பத்தர்செல்வம் கொலைக்கு பழிக்குப்பழி வாங்கும் விதமாக கடலூர் சிறையில் இருக்கும் ஆயுள் தண்டனை கைதியான விழுப்புரம் கல்லூரி சாலையை சேர்ந்த பிரபல ரவுடி இருசப்பன் அதே சிறையில் இருக்கும் சென்னை எண்ணூரை சேர்ந்த கூலிப்படை தலைவன் தனசேகர் உதவியுடன் அவரது ஆதரவாளர்கள் மூலம் செல்வராஜை கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து இந்த கொலை சம்பவம் தொடர்பாக இருசப்பன், தனசேகர், விழுப்புரம் கல்லூரி சாலையை சேர்ந்த அசாருதீன் என்கிற இமாம்அலி (27), அப்பு என்கிற கலையரசன் (27), காஞ்சீபுரம் மாவட்டம் சின்னகாஞ்சீபுரத்தை சேர்ந்த தியாகு என்கிற தியாகராஜன் (27), திருச்சி திருவெறும்பூரை சேர்ந்த அருண்குமார் (27) உள்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

4 பேர் குண்டர் சட்டத்தில் கைது

இவர்களில் அசாருதீன், அப்பு, தியாகு, அருண்குமார் ஆகியோர் மீது விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு கொலை, கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. தொடர்ந்து இவர்கள் 4 பேரும் ரவுடியிச செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.

இதனால் இவர்களின் நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு நரேந்திரன்நாயர் பரிந்துரை செய்தார். இதையடுத்து அசாருதீன் உள்பட 4 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு கலெக்டர் எல்.சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில் போலீஸ் சூப்பிரண்டு நரேந்திரன்நாயர் அறிவுரைப்படி அசாருதீன் உள்பட 4 பேரையும் நேற்று விழுப்புரம் நகர போலீசார், குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து ஓராண்டு கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story