ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி தி.மு.க. நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கலந்து கொள்ளும் திருநாவுக்கரசர் பேட்டி


ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி தி.மு.க. நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கலந்து கொள்ளும் திருநாவுக்கரசர் பேட்டி
x
தினத்தந்தி 22 Dec 2016 3:45 AM IST (Updated: 22 Dec 2016 2:10 AM IST)
t-max-icont-min-icon

ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி தி.மு.க. நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கலந்து கொள்ளும் என்று திருநாவுக்கரசர் தெரிவித்தார். ஜல்லிக்கட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் விருதுநகரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவத

விருதுநகர்,

ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி தி.மு.க. நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கலந்து கொள்ளும் என்று திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

ஜல்லிக்கட்டு

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் விருதுநகரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:–

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு ஒவ்வொரு பொங்கல் தோறும் ஜல்லிக்கட்டு நடைபெறும் என தெரிவித்தார்களே தவிர இதுவரை ஜல்லிக்கட்டு நடைபெற வாய்ப்பு இல்லாத நிலையே உள்ளது. மத்திய அரசு பாராளுமன்றத்தில் அவசர சட்டம் இயற்றி அதற்கு உச்சநீதிமன்றத்தில் ஆணை பெற்று ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும். ஜல்லிக்கட்டு தமிழர்களின் கலாசாரத்தோடு இணைந்தது.

ஜல்லிக்கட்டை நடத்த மத்திய–மாநில அரசுகளை வலியுறுத்தி, அலங்காநல்லூரில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என சட்டமன்ற எதிர்க் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அனைத்து கட்சிகளையும் இணைத்து நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியும் கலந்து கொள்ளும். கட்சிகள் தனித்தனியாக போராட்டம் நடத்தினால் காங்கிரஸ் கட்சியும் தனியாக போராட்டம் நடத்தும்.

மீனவர் பிரச்சினை

பா.ஜ.க. அரசு பதவியேற்ற உடன் மீனவர்களுக்காக தனி வாரியம், அமைச்சகம் ஏற்படுத்தப்படும் என அறிவித்தது. இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தமிழக மீனவர்கள், இலங்கை மீனவர்கள் மற்றும் அரசு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடந்தும் பலனில்லை. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில், இலங்கை கடற்படையினர் பிடித்துச்சென்ற மீனவர்களையும், விசைப்படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆனால் தற்போது தமிழக மீனவர்களின் 120 விசைப்படகுகள் இலங்கை கடலோரத்தில் பிடித்து வைக்கப்பட்டுள்ளன. தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் வாடுகிறார்கள். மீனவர்களையும், விசைப்படகுகளையும் மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சமீபத்திய புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும். முதல்–அமைச்சர் பன்னீர்செல்வம் இது குறித்து பிரதமரிடம் பேசியுள்ளார்.

கருப்பு பணம்

மத்திய அரசு பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பை நீக்கியதன் மூலம் கருப்பு பண ஒழிப்பு திட்டம் வெற்றி பெறவில்லை. கோடீஸ்வரர்கள் சிரமப்படவில்லை. ஏழை, எளிய மக்களும் நடுத்தர மக்களுமே அலைக்கழிக்கப்படும் நிலை உள்ளது. சோதனையின் போது ரூ.5 கோடி கருப்பு பணம் கண்டுபிடிக்கப்பட்டால் அதில் ரூ.50 லட்சம் புதிய 2,000 ரூபாய் நோட்டுகளாகவே உள்ளன. இந்த பணம் எங்கிருந்து சென்றது? ரிசர்வ் வங்கியிலிருந்தா அல்லது வங்கிகளிலிருந்தா?

புதிய 500 ரூபாய் நோட்டுகள் கிடைக்கவில்லை. கிடைக்கும் 2,000 ரூபாய் நோட்டுக்கும் சில்லரை கிடைப்பதில்லை. சொல்லப்போனால் 2,000 ரூபாய் நோட்டும் செல்லாத நிலையே உள்ளது. இந்த நிலையை கண்டித்து காங்கிரஸ் கட்சி பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது. அகில இந்திய துணைத்தலைவர் ராகுல்காந்தியும் மக்களுடன் வரிசையில் நின்று சிரமத்தை உணர்ந்து மத்திய அரசை கண்டித்துள்ளார். அரசு ஊழியர்களும் ஏழை, எளிய மக்களும் தாங்கள் வங்கியில் போட்டுள்ள நல்ல பணத்தை எடுக்க முடியாமல் திணறுகின்றனர். இந்த பிரச்சினை தீர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜெயலலிதா இறந்த பின்பு தற்போது தான் ஓ. பன்னீர்செல்வம் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். எனவே தற்போது தமிழக அரசு பற்றி எந்த கருத்தையும் கூற விரும்பவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது, முன்னாள் நகரசபை துணைத் தலைவர் பாலகிருஷ்ணசாமி, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீனாட்சி சுந்தரம், வட்டார காங்கிரஸ் தலைவர் வைரவசாமி, நகர காங்கிரஸ் தலைவர் வெயிலுமுத்து, நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் பால்பாண்டி ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக அவருக்கு விருதுநகர் போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு காங்கிரசார் வரவேற்பு அளித்தனர்.

மதுரை

முன்னதாக, விருதுநகர் செல்லும் வழியில், மதுரை விமான நிலையத்தில் திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது:–

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி பெற்றுத் தருவோம் என்று பா.ஜ.க.வினர் 2 ஆண்டுகளாக கூறி வருகின்றனர். ஆனால் சுப்ரீம் கோர்ட்டு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கவில்லை. ஜல்லிக்கட்டுக்காக பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் சிறப்பு மசோதா நிறைவேற்றப்படவில்லை. அதேபோன்று சுப்ரீம் கோர்ட்டிலும் மத்திய அரசு இதுதொடர்பாக தனது வாதத்தை எடுத்துக்கூறவில்லை. எனவே, இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறுவது சந்தேகம் தான்.

தமிழக தலைமைச் செயலாளர் ராமமோகன்ராவ் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவதைப் பார்க்கும்போது மத்திய பா.ஜ.க. அரசு மறைமுகமாக தமிழக அரசியலில் சில காரியங்களை சாதிக்க நினைப்பது தெரிகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story