பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் குப்பையில் போடப்படுகிறது குறைதீர்க்கும் கூட்டத்தில் அதிகாரிகள் மீது, விவசாயி புகார்


பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் குப்பையில் போடப்படுகிறது குறைதீர்க்கும் கூட்டத்தில் அதிகாரிகள் மீது, விவசாயி புகார்
x
தினத்தந்தி 22 Dec 2016 3:00 AM IST (Updated: 22 Dec 2016 2:23 AM IST)
t-max-icont-min-icon

பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் குப்பையில் போடப்படுவதாக குறைதீர்க்கும் கூட்டத்தில் அதிகாரிகள் மீது விவசாயி ஒருவர் புகார் கூறினார். விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் சிறப்பு கூட்டம்

திருப்பரங்குன்றம்,

பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் குப்பையில் போடப்படுவதாக குறைதீர்க்கும் கூட்டத்தில் அதிகாரிகள் மீது விவசாயி ஒருவர் புகார் கூறினார்.

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தாசில்தார் சரவணபெருமாள் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர், திருப்பரங்குன்றம் வட்டாரத்தில் வறட்சி குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், 118 எக்டேரில் உள்ள வேலிக்கருவை மரங்களை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

குழு அமைக்க வேண்டும்

கூட்டத்தில் விவசாயிகள் கேட்ட கேள்வியும், அதற்கு அதிகாரிகள் அளித்த பதிலும் வருமாறு:–

அழகாத்தேவன்:– நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். அதன்பின்பு யாரும் ஆக்கிரமிப்பு செய்யாத வகையில் நீர்நிலைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இதற்காக தனியாக ஒரு குழு அமைக்க வேண்டும்

செல்லக்கண்ணு:– தனக்கன்குளம் பெரியகண்மாயில் உள்ள 2 மடைகளில் ஒரு மடையை மறித்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. சொக்கத்தான் ஊருணியில் தனிநபர் ஒருவர் வீடு கட்டி ஆக்கிரமித்துள்ளார்.

குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படும்

முத்தையா:– தோப்பூரில் குடிநீர் பிரச்சினை அதிகமாக உள்ளது. சுடுகாட்டில் முட்செடிகள் அதிகமாக வளர்ந்துள்ளன. கண்மாய்க்குள் வேலிக்கருவை மரங்கள் வளர்ந்துள்ளன. இதை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை.

நகராட்சி ஆணையாளர் ஆசிக்:– குடிநீர் பிரச்சினை உடனடியாக தீர்க்கப்படும்.

ராஜு:– கண்மாயை தூர்வாரி தண்ணீர் தேக்க வேண்டும் விவசாயிகள் மற்றும் விவசாய கூலி தொழிலாளர்களுக்கு வறட்சி நிவாரண நிதி வழங்க வேண்டும். டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குப்பையில் போடப்படுகிறது

ராமமூர்த்தி:– உழவர் அட்டை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அய்யாத்தேவர்:– வேடர்புளியங்குளம் உள்பட 10–க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்பெறும் வகையில் மதுரை–மாட்டுத்தாவணி இடையே அரசு பஸ் விட வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் பல முறை மனு கொடுத்தும் எந்த பலனும் இல்லை. அதிகாரிகளிடம் பொதுமக்கள் மனுவை கொடுத்து விட்டு வீட்டுக்கு திரும்புவதற்குள் அந்த மனுக்கள் குப்பை தொட்டிக்கு போய் விடுகின்றன. பொதுமக்களின் மனுக்கள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் மக்களை திரட்டி மறியல் போராட்டம் நடத்துவோம்.

தாசில்தார்:– எந்த மனுவையும் அதிகாரிகள் குப்பையில் போடமாட்டார்கள். விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இந்த கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Next Story