சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற 86 வயது முதியவருக்கு தியாகி பென்சன் வழங்க மறுப்பது பெரும் அநீதி மதுரை ஐகோர்ட்டு நீதிபதி வேதனை
சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற 86 வயது முதியவருக்கு தியாகி பென்சன் வழங்க மறுப்பது பெரும் அநீதி என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். சுதந்திர போராட்ட வீரர் மதுரையை சேர்ந்த எம்.அய்யாத்தேவர்(வயது 86), மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவ
மதுரை,
சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற 86 வயது முதியவருக்கு தியாகி பென்சன் வழங்க மறுப்பது பெரும் அநீதி என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.
சுதந்திர போராட்ட வீரர்மதுரையை சேர்ந்த எம்.அய்யாத்தேவர்(வயது 86), மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–
‘வெள்ளையனே வெளியேறு‘ இயக்கத்தில் இணைந்து நாட்டின் சுதந்திரத்துக்காக போராடி உள்ளேன். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வைத்தியநாத அய்யருடன் ஆலய பிரவேச நுழைவு போராட்டத்திலும் பங்கேற்று இருக்கிறேன். சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு 15.4.1943 முதல் 24.9.1943 வரை கர்நாடக மாநிலம் அல்லிபுரம் முகாம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தேன். அப்போது என்னுடன் ஏ.சி.பெரியசாமி, ஏ.எம்.லட்சுமணன் ஆகியோரும் சிறையில் இருந்தனர். என்னுடைய தந்தையும் சுதந்திர போராட்ட வீரர் தான்.
மனு நிராகரிப்புஇந்தநிலையில் தியாகி பென்சன் கேட்டு, கலெக்டரிடம் கடந்த பல வருடங்களாக தொடர்ந்து மனு கொடுத்து வருகிறேன். ஆனால் நான் சிறையில் இருந்தபோது 18 வயது பூர்த்தியாகவில்லை என்றும், பிறப்பு சான்றிதழில் என்னுடைய பெயர் இடம்பெறவில்லை என்றும் கூறி எனது மனுவை நிராகரித்துவிட்டனர். எனவே எனக்கு தியாகி பென்சன் வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் பிறப்பித்த உத்தரவு வருமாறு:–
மனுதாரருக்கு பென்சன் வழங்காததை என்னால் ஏற்க முடியவில்லை. முறையான சான்றிதழ்கள் கொடுத்தும் அவை போதுமானதாக இல்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். மனுதாரர் எவ்வளவு பழமையானவரோ, அதேபோல அவரது சான்றிதழ்களும் பழையது. 50 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் பிறப்பு சான்றிதழில் குழந்தைகளின் பெயர் இல்லாமல் தான் வழங்கப்படும் என்பது எல்லோருக்கும் தெரியும்.
பெரும் அநீதிசுதந்திரத்துக்காக போராடியதை காட்டிலும், பென்சன் வாங்குவதற்காக மனுதாரர் கடுமையாக போராடி வருகிறார். 86 வயதாகிவிட்ட அவருக்கு இனியும் பென்சன் வழங்க மறுப்பது பெரும் அநீதியாகும். இது வேதனை தருகிறது. எனவே கலெக்டரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. 2 வாரத்துக்குள் மனுதாரருக்கு தியாகி பென்சன் வழங்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மற்றொரு முதியவரும் வழக்குஇதேபோல மதுரையை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் துரைச்சாமித்தேவர் (95) தாக்கல் செய்த மனுவில், சுதந்திர போராட்டத்தின்போது என்னை தேடப்படும் குற்றவாளியாக ஆங்கிலேயர்கள் அறிவித்தனர். அப்போது 6 மாதம் தலைமறைவாக இருந்தேன். ஆனால் தற்போது தியாகி பென்சன் கேட்டு கலெக்டரிடம் கொடுத்த மனுவை நிராகரித்துவிட்டனர்.
ஏனென்றால் நான் சுதந்திர போராட்ட வீரர் என்பதற்கு தியாகி மாயாண்டிபாரதி, ஏ.எம்.லட்சுமணன் ஆகியோரிடம் சான்றிதழ் பெற்று தாக்கல் செய்திருந்தேன். அதில் மாயாண்டிபாரதி சான்றிதழ் வழங்க அதிகாரம் இல்லை என்றும், சுதந்திரபோராட்டத்தின்போது 18 வயது பூர்த்தி அடையவில்லை என்றும் கூறி எனது மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. எனக்கு பென்சன் வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு விசாரித்து பிறப்பித்த உத்தரவு வருமாறு:–
ஒரு சிறுவன் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளான் என்பதே மிகப்பெரிய விஷயம். மேலும் மனுதாரர் பென்சனுக்காக சான்றிதழ் வாங்கியவர்களில் ஒருவர் சுதந்திர போராட்ட வீரர் தான். அதை பரிசீலித்தாவது பென்சன் வழங்கியிருக்க வேண்டும். அவருடைய மனுவை நிராகரித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. 4 வாரத்துக்குள் அவருக்கு பென்சன் வழங்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.