ஆத்தூர் அருகே ஜெயலலிதா உருவச்சிலைகள் தயார் செய்யும் பணி தீவிரம்


ஆத்தூர் அருகே ஜெயலலிதா உருவச்சிலைகள் தயார் செய்யும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 22 Dec 2016 4:15 AM IST (Updated: 22 Dec 2016 2:40 AM IST)
t-max-icont-min-icon

ஆத்தூர் அருகே ஜெயலலிதா உருவச்சிலைகள் தயார் செய்யும் பணி தீவிரம்

ஆத்தூர்,

ஆத்தூர் அருகே ஜெயலலிதா உருவச்சிலைகள் தயார் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

ஜெயலலிதா உருவச்சிலைகள்

கடந்த 5-ந் தேதி முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் அடைந்தார். இதையொட்டி அ.தி.மு.க. தொண்டர்கள் மவுன ஊர்வலம் சென்றும், மொட்டை அடித்தும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனிடையே ஜெயலலிதாவின் நினைவாக அவருக்கு பல்வேறு வடிவங்களில் சிலை அமைத்தும், நினைவு அரங்கங்கள் கட்டியும் அ.தி.மு.க. தொண்டர்கள் தங்களது நன்றி உணர்வை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரியில் ஜெயலலிதாவின் உருவச்சிலை வைக்கப்பட்டது. இதனால் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் உள்ள சிலைகள் தயாரிப்பு கூடங்களில் ஜெயலலிதா உருவத்தில் கல் மற்றும் சிமெண்டு சிலைகள் வடிவமைக்கும் பணியில் சிற்பிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ஆத்தூர் அருகே தயாராகின்றன

குறிப்பாக சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் புறவழிச்சாலை பகுதியில் உள்ள சிற்பக்கூடத்தில் ஜெயலலிதா உருவ சிமெண்டு சிலைகள் செய்ய தற்போது அதிகளவில் ஆர்டர்கள் வருவதாக சிற்பக்கூட உரிமையாளர் வரதராஜன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:-

எங்கள் கூடத்தில் உருவாக்கப்பட்ட சிலை தான் புதுச்சேரியில் நிறுவப்பட்டுள்ளது. தற்போது 15 சிலைகள் செய்ய கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக ஜெயலலிதா புன்முறுவலுடன் கை அசைப்பது, இரட்டை விரலை உயர்த்தி காண்பிப்பது என்று வெவ்வேறு தோற்றத்துடன் பல்வேறு வர்ணங்களில் சிமெண்டு சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இங்கு சுமார் 6 அடி முதல் 7 அடி உயர சிலைகள் தயார் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story