திருச்சி அரசு மருத்துவமனை இயற்கை மையத்தில் மசாஜ், நவீன குளியல் சிகிச்சை வசதி தொடக்கம்


திருச்சி அரசு மருத்துவமனை இயற்கை மையத்தில் மசாஜ், நவீன குளியல் சிகிச்சை வசதி தொடக்கம்
x
தினத்தந்தி 22 Dec 2016 4:15 AM IST (Updated: 22 Dec 2016 2:43 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி அரசு மருத்துவமனை இயற்கை மையத்தில் மசாஜ், நவீன குளியல் சிகிச்சை வசதி தொடக்கம்

திருச்சி,

திருச்சி அரசு மருத்துவமனை இயற்கை மையத்தில் மசாஜ், நவீன குளியல் சிகிச்சை வசதி தொடங்கப்பட்டு உள்ளது.

அரசு மருத்துவமனை

திருச்சி அரசு மருத்துவமனையில் விபத்து மற்றும் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் திருச்சி, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். உள்நோயாளியாகவும் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அவசர சிகிச்சை பிரிவு இருந்த பழைய கட்டிடத்தில் கடந்த 2014-ம் ஆண்டு இயற்கை மருத்துவம் மற்றும் யோகா வாழ்வியல் சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது. தற்போது இந்த மையம் உதவி மருத்துவ அலுவலர் பிரீத்திபுஷ்கரிணி தலைமையில் செயல்பட்டு வருகிறது.

இயற்கை மருத்துவ முறை

இந்த மையத்தில் மூட்டுவலி, ஆஸ்துமா, முதுகுவலி, தோள்பட்டை வலி, சர்க்கரை நோய், குதிகால் வலி, தலைவலி, பக்கவாதம், சைனஸ், தூக்கமின்மை, மனஅழுத்தம், ரத்த கொதிப்பு ஆகிய அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு மருத்துவ அலுவலர் ஆலோசனையின் பேரில் இயற்கை மருத்துவ முறையில் சிகிச்சையும், யோகா பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மையத்தில் கடந்த ஜூலை மாதம் நீராவி எந்திர குளியல் முறை தொடங்கப்பட்டது. மேலும் அக்குபஞ்சர், காந்த சிகிச்சை, மண் சிகிச்சை போன்ற சிகிச்சைகளும் நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது இங்கு வரும் நோயாளிகளின் வசதிக்காக நடைபயிற்சி எந்திரம், சைக்கிளிங் பயிற்சி எந்திரம் மற்றும் இடுப்பு குளியல், முதுகு தண்டுவட நவீன குளியலுக்கான தேவையான தொட்டிகள், மசாஜ் செய்ய படுக்கைகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

நோயாளிகளின் பயன்பாட்டிற்காக அதனை நேற்று அரசு மருத்துவமனை “டீன்” மேரிலில்லி தொடங்கி வைத்தார். இதில் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் அனிதா, மருத்துவமனை இருக்கை மருத்துவ அதிகாரி (ஆர்.எம்.ஒ.) கருணாகரன், உதவி இருக்கை மருத்துவ அதிகாரி (ஏ.ஆர்.எம்.ஓ.) சித்ரா, திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

குளியல் முறை சிகிச்சை

இதனை தொடர்ந்து மையத்தின் உதவி மருத்துவ அலுவலர் பிரீத்திபுஷ்கரிணி நிருபர்களிடம் கூறியதாவது:-

சர்க்கரை நோய், தொப்பையை குறைக்க, பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் பிரச்சினைகள், ரத்த அழுத்தம், உடல் பருமன் போன்ற பிரச்சினைகள் உடைய நோயாளிகள் இந்த நடைபயிற்சி எந்திரம் மற்றும் சைக்கிளிங் பயிற்சியை தினமும் செய்தால் மேற்கண்ட பிரச்சினைகள் படிப்படியாக குறைந்து குணமாகும். நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், முதுகு வலி, ரத்த கொதிப்பு, பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பபை கோளாறு, தூக்கமின்மை ரத்த அழுத்தம், சிறுநீரக கோளாறு, சர்க்கரை நோய், ரத்த சோகை, மன அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த முதுகு தண்டுவட குளியல் முறை தொட்டியில் தினமும் 25 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை அமர்ந்து சிகிச்சை எடுத்து கொண்டால் மேற்கண்ட பிரச்சினைகள் சரியாகும்.

இந்த முறையில் நோயாளிகளுக்கு உடலுக்கு ஏற்ப குளிர்ந்த தண்ணீர், வெந்நீர் மூலம் சிகிச்சை முறை மேற்கொள்ளப்படுகிறது. இதே போன்று சர்க்கரை நோய், மன அழுத்தம், அசிடிட்டி, அல்சர், மஞ்சள் காமாலை, கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள், கல்லடைப்பு, குழந்தையின்மை, ஆண்மை குறைவு, ரத்த சோகை, உடல் பருமன், பசியின்மை போன்ற அறிகுறி உள்ளவர்கள் இடுப்பு குளியல் சிகிச்சை முறையை பயன்படுத்தலாம். இந்த மையம் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story