புளியரை மலை அடிவாரத்தில் வாழை, தென்னைகளை பிடுங்கி வீசி காட்டு யானைகள் அட்டகாசம்


புளியரை மலை அடிவாரத்தில் வாழை, தென்னைகளை பிடுங்கி வீசி காட்டு யானைகள் அட்டகாசம்
x
தினத்தந்தி 22 Dec 2016 4:30 AM IST (Updated: 22 Dec 2016 2:51 AM IST)
t-max-icont-min-icon

புளியரை மலை அடிவாரத்தில் வாழை, தென்னைகளை பிடுங்கி வீசி காட்டு யானைகள் அட்டகாசம்

செங்கோட்டை,

புளியரை மலை அடிவாரத்தில் வாழை, தென்னை, பாக்கு மரங்களை பிடுங்கி வீசி காட்டு யானைகள் அட்டகாசம் செய்தன. சேதம் அடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள்.

காட்டு யானைகள் அட்டகாசம்


நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் போதிய மழை இல்லாததால், மலைப்பகுதியில் உள்ள அணைகள், நீர்நிலைகள் வறண்டு வருகின்றன. இதனால் கேரளாவில் சபரிமலை, பம்பை உள்ளிட்ட வனப்பகுதிகளில் இருந்து யானைகள் கூட்டம் கூட்டமாக தண்ணீரை தேடி தமிழக வனப்பகுதிக்குள் வந்துவிடுகின்றன.

காட்டு யானைகள் செங்கோட்டையை அடுத்த புளியரை வனப்பகுதி மற்றும் அங்குள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்வது தொடர்ந்து வருகிறது.

சமீபத்தில் புளியரை உட்கோணம் பகுதியில் புகுந்த யானைகள் மா, தென்னை, வாழைகளை பிடுங்கி நாசப்படுத்தின. இதே போல் கொய்யா, பாக்கு மரங்களையும் சாய்த்தன.

மற்றொரு யானைக்கூட்டம் நேற்று அதிகாலையில் புளியரை பகவதிபுரம் கிராமம் வெள்ளைச்சாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் தென்னை, பாக்கு, வாழைகளை சாய்த்து நாசம் செய்தன. மாமரங்களின் கிளைகளை முறித்து வீசின.

இழப்பீடு வழங்க கோரிக்கை


இதுகுறித்து விவசாயிகள் கூறும் போது, “புளியரை மலை அடிவாரத்தில் காட்டு யானைகள் அட்டகாசம் அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்துள்ளோம். காட்டு யானைகள் அட்டகாசத்தை தடுக்க வேண்டும் என்று வனத்துறையினரிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த பலனும் இல்லை. எனவே இனியாவது உரிய நடவடிக்கை எடுத்து காட்டு விலங்குகள் விவசாய நிலங்களுக்குள் வருவதை தடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்” என்று தெரிவித்தனர்.


Next Story