புதுவை போலீஸ்காரர் கொலை வழக்கு: கல்வியியல் கல்லூரி அதிபர் உள்பட 2பேரிடம் போலீஸ் காவலில் தீவிர விசாரணை
புதுவை போலீஸ்காரர் அருணகிரி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட கல்வியியல் கல்லூரி அதிபர் உள்பட 2 பேரை காவலில் எடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். உடல் எரிக்கப்பட்ட இடத்தில் சாம்பல், தடயங்கள் சேகரிக்கப்பட்டன. போலீஸ்காரர் கொலை புதுவையி
புதுச்சேரி,
புதுவை போலீஸ்காரர் அருணகிரி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட கல்வியியல் கல்லூரி அதிபர் உள்பட 2 பேரை காவலில் எடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். உடல் எரிக்கப்பட்ட இடத்தில் சாம்பல், தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
போலீஸ்காரர் கொலைபுதுவையில் போக்குவரத்து போலீஸ்காரராக பணியாற்றி வந்தவர் அருணகிரி. இவர் கடந்த ஜனவரி மாதம் மாயமானார். இது தொடர்பாக அவரது மனைவி நெய்ரோஜா கொடுத்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்த விசாரணையில் 11 மாதங்களுக்குப் பின் துப்புதுலங்கியது.
இதுதொடர்பாக அருணகிரியின் மனைவியின் சகோதரி கணவரான (சகலை) சிவானந்தம் ராபர்ட், அவரது கூட்டாளியான கடலூரைச் சேர்ந்த முத்துராஜ் ஆகிய இருவரையும் முதலில் போலீசார் கைது செய்தனர். இவர்களில் சிவானந்தம் ராபர்ட் தவளக்குப்பம் பகுதியில் கல்வியியல் கல்லூரியை நடத்தி வருகிறார்.
மேலும் 3 பேர் கைதுபோலீசில் சிவானந்தம் ராபர்ட் அளித்த வாக்குமூலத்தில், நெய்ரோஜாவுடன் எனக்கு தொடர்பு இருப்பதாக கூறி அடிக்கடி அருணகிரி தகராறு செய்து வந்தார். இந்த பிரச்சினையில் ஒருமுறை தன்னை அடித்து அவமானப்படுத்தியதால் மது குடிக்க வைத்து கூட்டாளிகளுடன் சேர்ந்து அருணகிரியை மதுபாட்டிலால் அடித்து கொலை செய்ததாக திடுக்கிடும் தகவலை வெளியிட்டார்.
போலீஸ்காரர் அருணகிரியின் உடலை எரித்து சாம்பலை கடலில் கரைக்க உதவிய இவர்களது கூட்டாளிகளான கடலூரைச் சேர்ந்த சதீஷ்குமார், வெங்கட், வில்லியனூரைச் சேர்ந்த கருணாஜோதி ஆகியோரை போலீசார் தேடி வந்தனர். சேர்ந்து கொலை செய்து உடலை எரித்து சாம்பலை கடலில் கரைத்தது தெரியவந்தது. இந்தநிலையில் தலைமறைவாக இருந்த சதீஷ்குமார், வெங்கட், கருணாஜோதி ஆகியோரும் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.
தடயங்கள் சேகரிப்புஇந்த வழக்கு தொடர்பாக சிவானந்தம் ராபர்ட், முத்துராஜ் ஆகியோரை கோர்ட்டு அனுமதியின் பேரில் போலீசார் 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் கொலை நடந்தது எப்படி? என்பது குறித்து முழு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதன் ஒருகட்டமாக அருணகிரி எரித்துக் கொலை செய்யப்பட்ட இடமான கடலூர் வண்டிபாளையம் பகுதிக்கு சிவானந்தம் ராபர்ட், முத்துராஜ் ஆகியோரை போலீசார் நேற்று அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். அங்கு அவர்கள், அருணகிரியின் உடலை எரித்த இடத்தை அடையாளம் காண்பித்தனர். அங்கிருந்து அருணகிரியின் உடல் எரிக்கப்பட்ட இடத்தில் இருந்த சாம்பல், சில தடயங்களை போலீசார் சேகரித்தனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் புதுவை புறப்பட்டனர்.
சிவானந்தம் ராபர்ட், முத்துராஜ் ஆகியோர் 2 நாட்கள் காவல் முடிந்து நேற்று காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.