விபத்தில் வாலிபர் பலியால் வன்முறை: வேடிக்கை பார்த்த கிராம மக்களை போலீசார் கைது செய்யக்கூடாது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் தி.மு.க.வினர் மனு


விபத்தில் வாலிபர் பலியால் வன்முறை: வேடிக்கை பார்த்த கிராம மக்களை போலீசார் கைது செய்யக்கூடாது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் தி.மு.க.வினர் மனு
x
தினத்தந்தி 23 Dec 2016 4:30 AM IST (Updated: 22 Dec 2016 6:54 PM IST)
t-max-icont-min-icon

இளம்பிள்ளை அருகே விபத்தில் வாலிபர் இறந்தது தொடர்பாக நடைபெற்ற வன்முறையை வேடிக்கை பார்த்த கிராம மக்களை போலீசார் கைது செய்யக்கூடாது என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜனிடம் தி.மு.க.வினர் மனு கொடுத்தனர். தி.மு.க.வினர் மனு இளம்பிள்ளை அருகே உள்ள கோனேரிப்பட்டி க

சேலம்,

இளம்பிள்ளை அருகே விபத்தில் வாலிபர் இறந்தது தொடர்பாக நடைபெற்ற வன்முறையை வேடிக்கை பார்த்த கிராம மக்களை போலீசார் கைது செய்யக்கூடாது என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜனிடம் தி.மு.க.வினர் மனு கொடுத்தனர்.

தி.மு.க.வினர் மனு

இளம்பிள்ளை அருகே உள்ள கோனேரிப்பட்டி காட்டு வளவு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருடைய மகன் சரவணன் (வயது 24). இவர் கடந்த 17–ந் தேதி மோட்டார் சைக்கிளில் கூட்டாத்து புளியமரம் பகுதியில் சென்றார். அப்போது அந்த பகுதியில் போலீசார் வாகன சோதனை நடத்துவதை பார்த்து திரும்பிய போது, லாரி மோதி சம்பவ இடத்திலேயே சரவணன் பலியானார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து வன்முறை ஏற்பட்டது. இதில் போலீஸ் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டதுடன், போலீசாரும் தாக்குதலுக்கு உள்ளானார்கள். இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக 106 பேரை போலீசார் ஏற்கனவே கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்தநிலையில் நேற்று சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், சேலம் மத்திய மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான வக்கீல் ராஜேந்திரன் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காவேரி, எஸ்.ஆர்.பார்த்திபன் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு அவர்கள் போலீஸ் சூப்பிரண்டு ராஜனிடம் புகார் மனு கொடுத்தனர்.

கைது செய்யக்கூடாது

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–

சரவணன் இறந்ததால் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த சம்பவத்தில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பொதுமக்களையும் காவல்துறையினர் கைது செய்து வருகிறார்கள். குறிப்பாக இரவு நேரத்தில் இடங்கணசாலை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல கிராமங்களில் காவல்துறையினர் வீடு புகுந்து சம்பந்தமில்லாத இளைஞர்கள், பெரியவர்களை தேடி வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளார்கள்.

எனவே கிராமத்தில் வாழ்கிற மக்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் மற்றும் இயல்பு வாழ்க்கை பாதிப்படையாமல் பாதுகாப்பு அளித்திட வேண்டும். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வேடிக்கை பார்த்த கிராம மக்களை காவல் துறையினர் கைது செய்யக்கூடாது.

இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

தலைமறைவானவர்கள்

இதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு ராஜன் அவர்களிடம் தெரிவித்ததாவது:–

தலைக்கவசம் அணிந்து மோட்டார் சைக்கிளில் சென்றிருந்தால் வாலிபர் சரவணன் இறந்திருக்க மாட்டார். தலைக்கவசம் அணியாமல் வாகனங்களை ஓட்டி செல்வதாலும், செல்போன் பேசிக்கொண்டு வாகனங்களில் செல்வதாலும் தான் அதிக அளவில் விபத்துகள் ஏற்படுகிறது. இதை தடுக்கத்தான் போலீசார் வாகன சோதனையில் ஈடுபடுகிறார்கள்.

போலீசாரை தாக்கியது தொடர்பாக 106 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். போலீசாரை தாக்கியவர்களை தான் கைது செய்து வருகிறோம். இவர்களை தான் போலீசார் தேடி வருகிறார்கள். இனி இரவு நேரங்களில் கிராம பகுதிகளுக்கு போலீசார் சென்று விசாரிக்க மாட்டார்கள். இந்த சம்பவம் தொடர்பாக தற்போது தலைமறைவானவர்களை மட்டுமே தேடிவருகிறோம்.

இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு கூறினார்.


Next Story