போலி கணக்குகள் தொடங்கி பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் டெபாசிட்? சேலம் மத்திய கூட்டுறவு வங்கியில் வருமான வரி அதிகாரிகள் 2–வது நாளாக சோதனை
போலி கணக்குகள் தொடங்கி பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் சேலம் மத்திய கூட்டுறவு வங்கியில் வருமானவரி அதிகாரிகள் நேற்று 2–வது நாளாக சோதனை நடத்தினார்கள். வருமானவரி அதிகாரிகள் சோதனை சேலம் செரி ரோட்டில்
சேலம்,
போலி கணக்குகள் தொடங்கி பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் சேலம் மத்திய கூட்டுறவு வங்கியில் வருமானவரி அதிகாரிகள் நேற்று 2–வது நாளாக சோதனை நடத்தினார்கள்.
வருமானவரி அதிகாரிகள் சோதனைசேலம் செரி ரோட்டில் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகம் உள்ளது. 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட நவம்பர் 8–ந் தேதிக்கு பின்னர் இந்த வங்கியில் போலி கணக்குகள் தொடங்கப்பட்டு, ரூ.150 கோடிக்கு அந்த நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டு இருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது.
இதைத்தொடர்ந்து நேற்றுமுன்தினம் மாலை சேலம், சென்னை, திருச்சியை சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் 18 பேர் அங்கு வந்தனர். அப்போது பணியில் இருந்த அதிகாரிகளையும், பணியாளர்களையும் அவர்களது இருக்கையில் அப்படியே இருக்குமாறு கூறியதோடு, அவர்கள் வெளியே செல்லவும் தடை விதித்தனர். மேலும் வெளியில் இருந்தும் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
வங்கியில் சோதனை நடத்திய வருமானவரி அதிகாரிகள் வங்கியின் வரவு–செலவு, பண பரிமாற்றம் குறித்த ஆவணங்கள் உள்ளிட்ட விவரங்களை கேட்டு வாங்கி சரிபார்த்தனர்.
புதிய கணக்குகள்குறிப்பாக கடந்த மாதம் 8–ந் தேதி முதல் இந்த மாதம் 15–ந் தேதி வரை பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட விவரங்கள் குறித்தும், 8–ந் தேதி முதல் தற்போது வரை யார்–யார் பெயரில் கணக்குகள் தொடங்கப்பட்டு அவற்றில் பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யப்பட்டுள்ள என்ற விவரங்கள் குறித்தும் அவர்கள் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், ஆரம்பத்தில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு வந்த ரூ.50 கோடி புதிய ரூபாய் நோட்டுகள் எந்த வகையில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டது என்ற விவரங்கள் குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
ஆவணங்கள் ஆய்வுமேலும் சேலம் மத்திய கூட்டுறவு வங்கியின் கட்டுப்பாட்டில் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 64 இடங்களில் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் பணியாற்றும் கிளை மேலாளர்கள் அனைவரும் தங்களது வங்கியின் வரவு–செலவு, பண பரிமாற்றம், பழைய நோட்டுகளை டெபாசிட் செய்த விவரங்கள் அடங்கிய ஆவணங்கள் அனைத்தையும் உடனடியாக தலைமை அலுவலகத்திற்கு கொண்டு வர உத்தரவிடப்பட்டது.
அதன்படி கொண்டு வரப்பட்ட ஆவணங்களை வருமான வரி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
வங்கியின் தலைவர்மேலும் அந்த வங்கியில் உள்ள தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் தலைவரும், சேலம் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவருமான இளங்கோவனின் அறையிலும் வருமானவரி அதிகாரிகள் சோதனை நடத்தினர். இவர் சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளராகவும் இருந்து வருகிறார். விடிய, விடிய இந்த சோதனை நடைபெற்றது.
அப்போது முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய வருமானவரி அதிகாரிகள் அவற்றை முழுமையாக ஆய்வு செய்வதற்காக சேலம் காந்தி ரோட்டில் உள்ள வருமானவரி அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.
2–வது நாளாக நேற்று மாலையிலும் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு வருமான வரி அதிகாரிகள் வந்து சோதனை நடத்தினார்கள்.
பழைய ரூபாய் நோட்டுகள்அப்போது சேலம் மத்திய கூட்டுறவு வங்கியின் கட்டுப்பாட்டில் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள 380 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளின் ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டன. அவற்றில் 41 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் கடந்த 10–ந் தேதிவரை ரூ.10 லட்சத்திற்கு மேல் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றியது கண்டறியப்பட்டது.
அதைத்தொடர்ந்து 41 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அதிகாரிகள், ஆவணங்களுடன் வரவழைக்கப்பட்டு சரிபார்க்கும் பணி நடந்தது. அவற்றில் மேட்டூர் அருகே உள்ள வனவாசி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் மட்டும் ரூ.82 லட்சத்திற்கு பழைய ரூபாய் நோட்டுகள் மாற்றப்பட்டது தெரியவந்தது. எனவே, அது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.