பொங்கலூரில் முகவரி கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறித்த வாலிபர் கைது


பொங்கலூரில் முகவரி கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறித்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 23 Dec 2016 4:15 AM IST (Updated: 22 Dec 2016 9:33 PM IST)
t-max-icont-min-icon

பொங்கலூரில் முகவரி கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:– மூதாட்டி திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் காட்டூரை சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 70). இவர்

பொங்கலூர்,

பொங்கலூரில் முகவரி கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

மூதாட்டி

திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் காட்டூரை சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 70). இவர் கடந்த மாதம் 26–ந் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 20 வயது மதிக்க தக்க வாலிபர் ஒருவர் சரஸ்வதியிடம் குறிப்பிட்ட ஒருவரின் பெயரை சொல்லி முகவரி கேட்டார்.

அப்போது சரஸ்வதி “அப்படி ஒருவர் இங்கு இல்லை“ என்று கூறினார். அந்த வாலிபர் “பக்கத்து வீட்டில் உள்ள அக்காள் உங்களை கேட்டால் தெரியும்“ என்று கூறினார்கள். எனவே வேண்டுமானால் “நீங்களே வந்து கேட்டு பாருங்கள்“ என்றார்.

தங்க சங்கிலி பறிப்பு

இதை நம்பிய சரஸ்வதி அந்த வாலிபர் கூறிய வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது திடீரென அந்த வாலிபர் சரஸ்வதியின் கழுத்தில் கிடந்த 3 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பி சென்று விட்டார்.

இதுகுறித்து சரஸ்வதி அவினாசிபாளையம் போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்த ஆசாமி குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவினாசிபாளையம் சுங்கம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

வாலிபர் கைது

அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். அப்போது அந்த வாலிபர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். பின்னர் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த வாலிபர் பெயர் கோவிந்தராஜ் (20), கிருஷ்ணகிரி மாவட்டம், பெத்தாளப்பள்ளியை சேர்ந்தவர் என்பதும், கடந்த மாதம் 26–ந் தேதி பொங்கலூரில் முகவரி கேட்பது போல் நடித்து சரஸ்வதியிடம் 3 பவுன் நகையை பறித்து சென்றவர் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் கோவிந்தராஜை கைது செய்தனர். அவரிடம் இருந்து 3 பவுன் தங்க சங்கிலி மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். மேலும் இவர் மீது கிருஷ்ணகிரி, தர்மபுரி, உடுமலை, கோவை துடியலூர் ஆகிய போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வீடுபுகுந்து நகை திருடியது என பல்வேறு வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story