கோவை வழியாக கேரளாவுக்கு ரெயிலில் கடத்திய 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்


கோவை வழியாக கேரளாவுக்கு ரெயிலில் கடத்திய 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 23 Dec 2016 4:30 AM IST (Updated: 22 Dec 2016 10:28 PM IST)
t-max-icont-min-icon

கோவை வழியாக கேரளாவுக்கு ரெயிலில் கடத்திய 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தல்–கண்காணிப்பு கோவையில் உள்ள ரேஷன்கடைகளில் விலையில்லா அரிசி பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படும் நிலையில், அவ்வப்போது ரேஷன் அரிசி கடத்தலும் நடைபெற்றுக்கொண்டே இருகிற

கோவை,

கோவை வழியாக கேரளாவுக்கு ரெயிலில் கடத்திய 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

கடத்தல்–கண்காணிப்பு

கோவையில் உள்ள ரேஷன்கடைகளில் விலையில்லா அரிசி பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படும் நிலையில், அவ்வப்போது ரேஷன் அரிசி கடத்தலும் நடைபெற்றுக்கொண்டே இருகிறது. கடைகளில் இருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுகிறதா? என்பதை கண்காணிக்க மாவட்ட வழங்கல் துறை மூலம் அடிக்கடி சோதனை நடத்தப்படுகிறது. இருந்தபோதிலும் ரேஷன் அரிசி கடத்தல் கோவையில் இருந்து கேரளாவுக்கு கடத்தப்படுவது அதிகரித்து உள்ளது.

இதனால் கோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் வாளையாறு, வேலாந்தாவளம் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் வாகன சோதனை நடத்தப்படுகிறது. இந்த சோதனையால் தற்போது ரெயில்களில் கேரளாவுக்கு அரிசி கடத்தல் அதிகரித்துள்ளதாக தெரிகிறது. இதனால் கோவை மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணமூர்த்தி தலைமையில் பறக்கும்படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

இந்த நிலையில் நேற்று காலை கோவை வழியாக கேரளா செல்லும் மங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. உடனே பறக்கும்படை தாசில்தார் தனபால் தலைமையில் அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அங்கு நின்றிருந்த ரெயிலில் ஏறி, ஒவ்வொரு பெட்டிகளிலும் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது ஒரு பெட்டியில் சிறு, சிறு மூட்டைகளில் 500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இந்த அரிசி கேரளாவுக்கு கடத்திச்செல்வதற்கு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதிகாரிகள் சோதனை நடத்தியதும், அந்த ரேஷன் அரிசியை கொண்டு வந்தவர்கள் வேறு பெட்டிகளுக்கு சென்று விட்டனர். இதனால் அதிகாரிகள் அந்த ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர். இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story