விவசாயியிடம் பறிமுதல் செய்த டிராக்டரை திரும்ப வழங்கக்கோரி வங்கியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் சாலை மறியல்; 56 பேர் கைது


விவசாயியிடம் பறிமுதல் செய்த டிராக்டரை திரும்ப வழங்கக்கோரி வங்கியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் சாலை மறியல்; 56 பேர் கைது
x
தினத்தந்தி 23 Dec 2016 4:30 AM IST (Updated: 22 Dec 2016 10:49 PM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவிலில் விவசாயியிடம் பறிமுதல் செய்த டிராக்டரை திரும்ப வழங்கக்கோரி வங்கியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலை மறியலில் ஈடுபட்ட 56 பேர் கைது செய்யப்பட்டனர். விவசாயி தற்கொலை முயற்சி நெல்லை மாவட்டம் திருவேங்கடம் தாலுகா

சங்கரன்கோவிலில் விவசாயியிடம் பறிமுதல் செய்த டிராக்டரை திரும்ப வழங்கக்கோரி வங்கியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலை மறியலில் ஈடுபட்ட 56 பேர் கைது செய்யப்பட்டனர்.

விவசாயி தற்கொலை முயற்சி

நெல்லை மாவட்டம் திருவேங்கடம் தாலுகா முக்கூட்டுமலை கிராமத்தை சேர்ந்தவர் ஆதிநாராயணசாமி. விவசாயி. இவர் வங்கியில் கடன் வாங்கி டிராக்டர் வாங்கினார். வங்கிக்கு கட்ட வேண்டிய மாதத்தவணை ரூ.15 ஆயிரத்தை சில மாதங்களாக கட்டாததால் வங்கி அதிகாரிகள் அந்த டிராக்டரை பறிமுதல் செய்தனர். இதனால் மனமுடைந்த ஆதிநாராயணசாமி அந்த வங்கியின் முன்பு மண்எண்ணெயை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதுகுறித்து தகவல் அறிந்த சங்கரன்கோவில் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

சாலை மறியல் போராட்டம்

இந்த நிலையில் பறிமுதல் செய்த டிராக்டரை திரும்ப வழங்கக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ் விவசாய சங்கம், கரும்பு விவசாயிகள் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று காலை சங்கரன்கோவில்– ராஜபாளையம் ரோட்டில் உள்ள சம்பந்தப்பட்ட வங்கியை முற்றுகையிட்டனர்.

முற்றுகை போராட்டத்தில் தமிழ் விவசாயிகள் சங்க மாநில தலைவர் நாராயணசாமி, தமிழ்நாடு விவசாய சங்க மாநில துணை தலைவர் ரவீந்திரன், மாவட்ட தலைவர் முத்துப்பாண்டியன், செயலாளர் வேலுமயில், கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் பழனிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் வங்கி அதிகாரிகள், சங்கரன்கோவில் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜேந்திரன் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். சுமார் 3 மணி நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் எந்தவித முடிவும் எடுக்கப்படாததால் விவசாய சங்கத்தினர் வங்கி முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது டிராக்டரை பறிமுதல் செய்து விவசாயியை தற்கொலைக்கு தூண்டிய வங்கி அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினர் 9 பெண்கள் உள்பட 56 பேர் கைது செய்தனர். இந்த போராட்டத்தால் சங்கரன்கோவில்– ராஜபாளையம் சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story