இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கக்கோரி பாம்பன் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்


இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கக்கோரி பாம்பன் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
x
தினத்தந்தி 23 Dec 2016 4:45 AM IST (Updated: 23 Dec 2016 12:51 AM IST)
t-max-icont-min-icon

இலங்கை சிறையில் உள்ள 51 மீனவர்களையும், 114 விசைப்படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பாம்பன் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இதுதொடர்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிறைபிடிப்பு ராமேசுவரம், பாம்பன் உள்ளிட்

ராமேசுவரம்,

இலங்கை சிறையில் உள்ள 51 மீனவர்களையும், 114 விசைப்படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பாம்பன் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இதுதொடர்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிறைபிடிப்பு

ராமேசுவரம், பாம்பன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 22 மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாக ஏற்கனவே இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் தமிழக மீனவர்களின் 114 விசைப்படகுகளும் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் மற்றும் விசைப்படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக அரசு, அரசியல் கட்சியினர், மீனவர் சங்கங்கள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்தாக கூறி, ராமேசுவரம், பாம்பன், தூத்துக்குடி ஆகிய பகுதிகளை சேர்ந்த 29 மீனவர்களை, 3 படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்று கைது செய்தனர். பின்னர் அவர்கள் மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பாம்பனை சேர்ந்த 5 மீனவர்களில் கிறிஸ்டி என்பவர் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர். அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்தார் என்று கூறப்படுகிறது. ஒரே நாளில் 29 மீனவர்கள் சிறைபிடித்து செல்லப்பட்ட சம்பவம் ராமேசுவரம், பாம்பன் மீனவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

வேலை நிறுத்தம்

தற்போது பிடித்துச்செல்லப்பட்ட 29 தமிழக மீனவர்களுடன் ஏற்கனவே இலங்கை சிறையில் உள்ள 22 மீனவர்கள் என மொத்தம் 51 பேரை விடுதலை செய்ய வேண்டும், இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் 114 விசைப்படகுகளை விடுவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பாம்பன் மீனவர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக பாம்பன் கடற்கரையில் 300–க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் நிறுத்தப்பட்டு உள்ளன. 1,500–க்கும் மேற்பட்டோர் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக பாம்பன் மீன்பிடி துறை முகம் வெறிச்சோடி காணப்பட்டது.

ஆர்ப்பாட்டம்

இந்தநிலையில் இலங்கை சிறையில் உள்ள அனைத்து மீனவர்களையும் மற்றும் படகுகளையும் உடனே விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாம்பன் மீனவர்கள் அங்குள்ள பஸ்நிறுத்தம் அருகில் அனைத்து மீனவர்கள் சங்கம் சார்பில் நேற்று மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பாம்பன் விசைப்படகு மீனவ சங்க பிரதிநிதிகள் திரவியம், ஜான்சன், வில்சன், சிப்பி சேசு, முன்னாள் ஊராட்சி தலைவர் பேட்ரிக், நிரபராதி மீனவர்கள் கூட்டமைப்பு தலைவர் அருளானந்தம், சைமன், நாட்டுப்படகு மீனவ சங்க தலைவர் ராயப்பன், செயலாளர் ஜெயபாஸ்கர், பங்குதந்தை ஜான்பிரிட்டோ, கிராம தலைவர் முனீஸ்வரன் உள்பட மீனவர்கள், பெண்கள், இலங்கை சிறையில் உள்ள மீனவர்களின் குடும்பத்தினருடன் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோஷமிட்ட மீனவ பெண்கள் 2 பேர் திடீரென மயங்கி விழுந்தனர். உடனே அவர்கள் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


Next Story