குளித்தலையில் உதவித்தொகை வழங்கக்கோரி முதியோர்கள் வங்கி முன்பு திரண்டதால் பரபரப்பு


குளித்தலையில் உதவித்தொகை வழங்கக்கோரி முதியோர்கள் வங்கி முன்பு திரண்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 23 Dec 2016 4:15 AM IST (Updated: 23 Dec 2016 2:18 AM IST)
t-max-icont-min-icon

குளித்தலையில் உதவித்தொகை வழங்கக்கோரி முதியோர்கள் வங்கி முன்பு திரண்டதால் பரபரப்பு

குளித்தலை,

குளித்தலையில் உதவித்தொகை வழங்கக்கோரி முதியோர்கள் வங்கி முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

முதியோர் உதவித்தொகை

குளித்தலையில் உள்ள கோட்டமேடு, குட்டப்பட்டி, அய்யனேரி, தாளியாம்பட்டி பகுதிகளை சேர்ந்த முதியோர்கள் பலர் காவிரி நகர் பகுதியில் உள்ள ஸ்டேட் வங்கி மூலம் உதவித்தொகை பெற்று வந்தனர். இந்நிலையில் மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த முதியோர்கள் பலர் உதவித்தொகை தற்போது சரிவர வழங்கப்படாமல் அலைக்கழிக்கப்படுவதாக கூறி ஸ்டேட் வங்கி மேலாளரிடம் முறையிட வங்கி முன்பு திரண்டனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:- எங்களுக்கு குளித்தலை காவிரி நகர் பகுதியில் உள்ள ஸ்டேட் வங்கியில் கணக்கு உள்ளது. எங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும் முதியோர் உதவித்தொகையானது இந்த வங்கியின் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள வங்கி பிரதிநிதி மூலம் வழங்கப்படுகிறது.

கிடைப்பதில்லை

இந்த நிலையில் ஒவ்வொரு மாதமும் முதியோர் உதவித்தொகை வழங்கும் அவர் குளித்தலை நகரப்பகுதி மற்றும் கிராமப்பகுதியில் உள்ள வெவ்வேறு இடங்களுக்கு வரச்சொல்லி எங்களை அலைக்கழிக்கின்றார். இந்த உதவித்தொகையை பெறுவதற்காக நாங்கள் எங்கள் ஊரில் இருந்து காலை 8 மணிக்கே குளித்தலை வந்து காத்திருக்கிறோம். உதவித்தொகை பெற நாங்கள் குளித்தலை பகுதிக்கு வந்து செல்ல கணிசமான தொகை செலவாகிறது. மாதம் முதல் தேதியில் கிடைக்க வேண்டிய உதவித்தொகை 20 தேதிக்கு மேலாகியும் எங்களுக்கு கிடைப்பதில்லை. எனவே எங்களுக்கு குறிப்பிட்ட இடத்தில் வைத்து மாதம் தோறும் உதவித்தொகை வழங்க வேண்டும். இல்லையெனில் வேறு வங்கிக்கு எங்களது கணக்கை மாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பரபரப்பு

இதையடுத்து வங்கி மேலாளரிடம், தாங்கள் அலைக் கழிக்கப்படுவதையும், தங்கள் கோரிக்கை குறித்தும் எடுத்துக்கூறினர். இதுதொடர்பாக அவர் உரிய அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார். மேலும் இன்று (நேற்று) அனைவருக்கும் உதவித்தொகை வழங்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story