வழித்தடங்களை முறையாக பின்பற்றவில்லை என கூறி மினிபஸ்களை கிராமமக்கள் சிறைபிடிப்பு


வழித்தடங்களை முறையாக பின்பற்றவில்லை என கூறி மினிபஸ்களை கிராமமக்கள் சிறைபிடிப்பு
x
தினத்தந்தி 23 Dec 2016 4:15 AM IST (Updated: 23 Dec 2016 2:20 AM IST)
t-max-icont-min-icon

வழித்தடங்களை முறையாக பின்பற்றவில்லை என கூறி மினிபஸ்களை கிராமமக்கள் சிறைபிடிப்பு

திருத்துறைப்பூண்டி,


திருத்துறைப்பூண்டி அருகே வழித்தடங்களை முறையாக பின்பற்றவில்லை என கூறி மினிபஸ்களை கிராமமக்கள் சிறைபிடித்தனர்.

வழித்தடங்கள்

தமிழகம் முழுவதும் மாணவ-மாணவிகள் பள்ளி, கல்லூரிக்கு செல்லவும், நோயாளிகள் மருத்துவ மனைக்கு செல்வதற்காக பஸ் வசதிகள் இல்லாத குக்கிராமங்களில் இருந்து நகர்புறங்களுக்கு செல்ல வசதியாகவும் தனியார் மினிபஸ் அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு, குறிப்பிட்ட வழித்தடங்கள் வழியாக இயக்க பர்மிட் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த மினிபஸ் உரிமையாளர்களும் அந்த வழித்தடங்களை முறையாக பின்பற்றவில்லை என தெரிகிறது. இதனால் பொதுமக்கள் சிரமப்படுவதுடன் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் திருத்துறைப்பூண்டியிலிருந்து வரம்பியம், விட்டுக்கட்டி, வாளமாபுரம், வீரபுரம், பள்ளங்கோவில், கொத்த மங்களம், எழிலூர், மருத வனம், மாங்குடி, களப்பால், தண்டலச்சேரி, மணலி, ஆலத்தம்பாடி, இளவரசநல்லூர், பொன்னிரை ஆகிய வழித் தடங்களுக்கு 10-க்கும் மேற்பட்ட மினிபஸ்களுக்கு பர்மிட் வழங்கப்பட்டுள்ளது.

மினிபஸ்கள் சிறைபிடிப்பு

ஆனால் மினிபஸ்கள் உரிமையாளர்கள் யாரும் இந்த வழித்தடங்களை முறையாக பின்பற்றவில்லை என கூறி விட்டுக்கட்டி வரம்பியத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் வரம்பியம் முன்னாள் ஊராட்சிமன்றத்தலைவர் ஜோதிபாசு தலைமையில் முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர்கள் ராஜேந்திரன், முருகேஷ், சுப்பிரமணியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டசெயலாளர் வி.த.செல்வன், விட்டுக்கட்டி விவசாய சங்க செயலாளர் முரளி ஆகியோர் முன்னிலையில் போலீஸ் காலனி புதுப் பாலம் அருகில் மினிபஸ்களை சிறைபிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருத்துறைப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் காமராஜ், ஏட்டு ரவிக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மினிபஸ்களை சிறைபிடித்த கிராமக்களிடமும், மினிபஸ் உரிமையாளர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் மினிபஸ் குறிப்பிட்ட வழித்தடங்களில் இனிமேல் செல்வதாக உறுதியளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. மேலும் பர்மிட் இல்லாத மினிபஸ்கள் மீது போக்குவரத்து துறை அதி காரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அரசுக்கு, கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story