பிரதமர் மோடியால் தமிழகத்திற்கு விடிவு ஏற்படும் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா பேச்சு


பிரதமர் மோடியால் தமிழகத்திற்கு விடிவு ஏற்படும் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா பேச்சு
x
தினத்தந்தி 24 Dec 2016 2:30 AM IST (Updated: 23 Dec 2016 11:57 PM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடியால் தமிழகத்திற்கு விடிவு ஏற்படும் என்று பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கூறினார். கருத்தரங்கு கோவில்பட்டி கோ.வெங்கடசாமி நாயுடு கல்லூரியில் பண மதிப்பு குறைத்தல் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று மதியம் நடந்தது. இதில் பா.ஜ.க. தேசிய செயலா

கோவில்பட்டி,

பிரதமர் மோடியால் தமிழகத்திற்கு விடிவு ஏற்படும் என்று பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கூறினார்.

கருத்தரங்கு

கோவில்பட்டி கோ.வெங்கடசாமி நாயுடு கல்லூரியில் பண மதிப்பு குறைத்தல் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று மதியம் நடந்தது. இதில் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் மாலையில் கோவில்பட்டி தொழில் வர்த்தக சங்க அரங்கத்தில் தொழில் அதிபர்களுடன் கலந்துரையாடினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

வருமான வரி சோதனை

தமிழகம், கேரளா, கர்நாடக மாநிலங்களில் வருமான வரித்துறையினர், சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த சில நாட்களாக தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் தலைமை செயலாளர் அலுவலகம், வீடு உள்ளிட்ட 14 இடங்களில் நடந்த சோதனையில் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் மற்றும் தங்கம், ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மணல் மாபியாவாக செயல்பட்ட சேகர் ரெட்டியின் வீட்டிலும் நூற்றுக்கணக்கான கோடி ரூபாயும், கிலோ கணக்கில் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

கேரள மாநில முதல்– மந்திரி பினராய் விஜயன் கூட்டுறவு வங்கிகள் மூலம் பணம் பரிவர்த்தனை செய்ய வேண்டும் என்று கூறுகிறார். ஆனால் கொல்லம், கோழிக்கோடு, மல்லபுரம் ஆகிய பகுதிகளில் சி.பி.ஐ. அதிகாரிகளின் சோதனையில் ரூ.260 கோடி சிக்கி உள்ளது. கூட்டுறவு வங்கிகளில் பணம் பரிவர்த்தனை செய்யும்போது ஊழலுக்கு வழிவகுத்து விடுகிறது.

மோடியால் விடிவு

தி.மு.க., அ.தி.மு.க. போன்ற திராவிட கட்சிகளை விரட்டினால்தான் தமிழகத்தில் விடிவு காலம் பிறக்கும். அந்த விடியலை பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே கொண்டு வர முடியும். சில இடங்களில் வருமான வரித்துறை, சி.பி.ஐ. அதிகாரிகளின் சோதனைகளில் அதிகளவு புதிய ரூபாய் நோட்டுகள் சிக்குகின்றன. காங்கிரஸ், கம்யூனிஸ்டு யூனியன்களைச் சேர்ந்த சிலரால் இந்த பணம் முறைகேடாக வழங்கப்பட்டு உள்ளது.

விலைவாசி குறையும்

மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்தபோது புழக்கத்தில் இருந்த 14 சதவீத உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளை ஒழித்தார். தற்போது பிரதமர் நரேந்திர மோடி புழக்கத்தில் இருந்த 86 சதவீத உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளை ஒழித்து உள்ளார். ஊழலுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம். பணப்புழக்கம் விரைவில் சீரடைந்து விடும். விலைவாசியும் வெகுவாக குறையும்.

இவ்வாறு பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா பேசினார்.

கலந்து கொண்டவர்கள்

தொழில் வர்த்தக சங்க தலைவர் பழனிசெல்வம், செயலாளர் சுரேஷ், பொருளாளர் சுரேஷ்குமார், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம், செயலாளர் ராதாகிருஷ்ணன், தினசரி மார்க்கெட் வியாபாரிகள் சங்க செயலாளர் நீதிராஜன், தொழில் அதிபர்கள் திலகரத்தினம், ராஜவேல், முருகன், பா.ஜ.க. மாவட்ட தலைவர் பாலாஜி, செயலாளர் நாராயணன், நகர தலைவர் வேல்ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story