பவானிசாகர் அருகே தோட்டத்துக்குள் புகுந்து ஒற்றை யானை அட்டகாசம் 200 வாழைகள் சேதம்


பவானிசாகர் அருகே தோட்டத்துக்குள் புகுந்து ஒற்றை யானை அட்டகாசம் 200 வாழைகள் சேதம்
x
தினத்தந்தி 24 Dec 2016 3:30 AM IST (Updated: 24 Dec 2016 12:27 AM IST)
t-max-icont-min-icon

பவானிசாகர் அருகே தோட்டத்துக்குள் புகுந்த ஒற்றை யானை 200 வாழைகளை சேதப்படுத்தியது. யானைகள் அட்டகாசம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட பவானிசாகர் வனச்சரகத்தில் விளாமுண்டி வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் 20–க்கும் மேற்பட்ட ய

பவானிசாகர்,

பவானிசாகர் அருகே தோட்டத்துக்குள் புகுந்த ஒற்றை யானை 200 வாழைகளை சேதப்படுத்தியது.

யானைகள் அட்டகாசம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட பவானிசாகர் வனச்சரகத்தில் விளாமுண்டி வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் 20–க்கும் மேற்பட்ட யானைகள் இரவு நேரத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி வனப்பகுதியையொட்டி உள்ள தோட்டங்களில் புகுந்து விவசாய பயிரை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் யானைகள் வெளியேறுவதை தடுக்க வனத்துறையினர் அகழி வெட்டினார்கள். சில இடங்களில் பாறைகள் உள்ளதால் சரியான அளவில் அகழி வெட்டப்படவில்லை. பாறைகள் உள்ள இடத்தில் மேடாக உள்ளதால் யானைகள் சர்வசாதாரணமாக அகழியை தாண்டி தோட்டங்களுக்குள் நுழைந்து விடுகின்றன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் வனப்பகுதியில் இருந்து ஒற்றை யானை பவானிசாகர் அருகே உள்ள கோடேபாளையத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவரது வாழை தோட்டத்துக்குள் புகுந்தது. பின்னர் வாழைகளை தின்றும் காலால் மிதித்தும் சேதப்படுத்தியது.

வாழை தோட்டம் சேதம்

சத்தம் கேட்டு வீட்டில் இருந்த செல்வராஜ் ஓடிவந்து பார்த்தார். அப்போது தோட்டத்தில் யானை நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அக்கம்பக்கத்து தோட்டத்து விவசாயிகளுக்கு தகவல் கொடுத்தார். தகவல் கிடைத்ததும் அனைவரும் அங்கு ஒன்று சேர்ந்து தீப்பந்தம் காட்டி யானையை காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது யானை செல்வராஜின் தோட்டத்தில் இருந்து அருகே உள்ள ரங்கசாமி என்பவரின் சோளத்தோட்டத்துக்குள் நுழைந்தது. இதில் அங்கு பயிரிடப்பட்டிருந்த ½ ஏக்கர் பரப்பளவிலான சோளப்பயிர் நாசம் ஆனது. அங்கிருந்து தீப்பந்தம் காட்டி யானையை விவசாயிகள் விரட்டிவிட்டனர். சுமார் ½ மணி நேர போராட்டத்துக்கு பிறகு யானை விரட்டி அடிக்கப்பட்டது. யானையால் சுமார் 200 வாழைகள் சேதப்படுத்தப்பட்டதாக விவசாயி செல்வராஜ் தெரிவித்தார்.

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, ‘யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறுவதை தடுக்க வனப்பகுதியையொட்டி உள்ள அகழிகளை ஆழப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ என்றனர்.


Next Story