ராதாபுரம் அருகே புனித அந்தோணியார் ஆலயத்தில் 10½ பவுன் தங்க நகைகள் திருட்டு போலீசார் விசாரணை


ராதாபுரம் அருகே புனித அந்தோணியார் ஆலயத்தில் 10½ பவுன் தங்க நகைகள் திருட்டு போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 24 Dec 2016 12:43 AM IST (Updated: 24 Dec 2016 12:43 AM IST)
t-max-icont-min-icon

ராதாபுரம் அருகே புனித அந்தோணியார் ஆலயத்தில் 10½ பவுன் தங்க நகைகள் திருடு போயின. இதுகுறித்த புகாரின் பேரில் ராதாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புனித அந்தோணியார் ஆலயம் நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா சமூகரெங்கபுரம் அருகே முத்துநாடார்குடியிரு

ராதாபுரம்,

ராதாபுரம் அருகே புனித அந்தோணியார் ஆலயத்தில் 10½ பவுன் தங்க நகைகள் திருடு போயின. இதுகுறித்த புகாரின் பேரில் ராதாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புனித அந்தோணியார் ஆலயம்

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா சமூகரெங்கபுரம் அருகே முத்துநாடார்குடியிருப்பில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் சாவியை, அதே பகுதியை சேர்ந்த அந்தோணிமுத்து என்பவர் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆலயத்தில் உள்ளூரை சேர்ந்தவர்கள் மட்டுமன்றி வெளியூரை சேர்ந்தவர்களும் அவ்வப்போது வந்து ஜெபம் செய்து விட்டு செல்வார்களாம். வெளியூரை சேர்ந்தவர்கள் ஜெபம் செய்ய வரும் போது, ஆலயம் பூட்டியிருந்தால் அந்தோணிமுத்துவிடம் சாவியை வாங்கி ஆலயத்தை திறந்து ஜெபம் செய்வதும், பின்னர் ஆலயத்தை பூட்டி அவரிடம் சாவியை கொடுத்து விட்டு செல்வதாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு புனித அந்தோணியார் சொருபத்துக்கு தங்க நகைகள் கொண்டு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. கடந்த 21–ந் தேதி வழக்கம் போல வெளியூரை சேர்ந்தவர்கள் ஆலயத்துக்கு வந்துள்ளனர். கடைசியாக 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஜெபம் செய்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

தங்க நகைகள் திருட்டு

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவில் புனித அந்தோணியார் சொரூபத்தை பார்த்த போது, அதில் அணிவிக்கப்பட்டிருந்த தங்க நகைகள் திருடு போனது தெரியவந்தது. மொத்தம் 10½ பவுன் தங்க நகைகள் அணிவித்திருந்ததாக கூறப்படுகிறது. மேலும் அங்கிருந்த உண்டியலையும் உடைத்து அதில் இருந்த பணத்தையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுபற்றி ராதாபுரம் போலீசில் ஊர் தலைவர் பனிதாசன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story