மாவட்டம் முழுவதும் போலி டாக்டர்களை பிடிக்க 9 தனிப்படைகள் தேடுதல் வேட்டை


மாவட்டம் முழுவதும் போலி டாக்டர்களை பிடிக்க 9 தனிப்படைகள் தேடுதல் வேட்டை
x
தினத்தந்தி 24 Dec 2016 3:45 AM IST (Updated: 24 Dec 2016 1:11 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் போலி டாக்டர்களை பிடிக்க 9 தனிப்படைகள் அமைத்து, தேடுதல் வேட்டை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. முதற்கட்ட சோதனையில் 3 பேர் சிக்கி உள்ளனர். 9 தனிப்படைகள் தமிழகத்தில் சமீப காலமாக போலி டாக்டர்களின் அட்டூழியம் அதிகரித்த

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் போலி டாக்டர்களை பிடிக்க 9 தனிப்படைகள் அமைத்து, தேடுதல் வேட்டை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. முதற்கட்ட சோதனையில் 3 பேர் சிக்கி உள்ளனர்.

9 தனிப்படைகள்

தமிழகத்தில் சமீப காலமாக போலி டாக்டர்களின் அட்டூழியம் அதிகரித்து வருகிறது. இதை ஒடுக்குவதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலும் கலெக்டர் டி.ஜி.வினய் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவுக்கு நலப்பணிகள் இணை இயக்குனர் மாலதி பிரகாஷ் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார்.

இந்த நிலையில், போலி டாக்டர்களை களையெடுப்பதற்காக 9 தனிப்படைகள் அமைத்து கலெக்டர் உத்தரவு பிறப்பித்து உள்ளார். இந்த தனிப்படையில், சுகாதாரத்துறை அதிகாரிகள் தலைமையில் வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் போலீசாரும் அங்கம் வகிக்கிறார்கள். மாவட்டம் முழுவதும் சோதனை நடத்தி போலி டாக்டர்களை ‘பொறி’ வைத்து பிடிக்க அவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

3 பேர் சிக்கினர்

முதற்கட்டமாக நிலக்கோட்டை, கொடைரோடு, கோபால்பட்டி பகுதிகளில் தனிப்படையினர் நடத்திய அதிரடி சோதனையில், திண்டுக்கல்லை சேர்ந்த செல்வராஜ் (வயது 50), விளாம்பட்டியை சேர்ந்த செல்வி (38) ஆகியோரும், கோபால்பட்டியை சேர்ந்த ஒருவர் சிக்கினர். அவர்கள் பயன்படுத்திய மருந்துகள், அவர்களின் கல்வி சான்றுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர். அவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. தற்போது 3 பேரையும் கைது செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இதே போல, 9 தனிப்படைகளும் தொடர்ந்து அதிரடி சோதனை நடத்த இருக்கிறார்கள். அதிகாரிகளின் இந்த நடவடிக்கை போலி டாக்டர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. சிலர் தாங்கள் நடத்தி வந்த மருத்துவமனைகளை தற்காலிகமாக மூடிவிட்டனர்.

இது தொடர்பாக நலப்பணிகள் இணை இயக்குனர் மாலதி பிரகாஷ் கூறும்போது, ‘திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 9 தனிப்படைகள் அமைத்து போலி டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க தீவிரம் காட்டி வருகிறோம். இதற்காக போலி டாக்டர்களின் பட்டியலை வைத்து, அதிரடி சோதனை நடத்துகிறோம். இதில் கைப்பற்றப்படும் ஆவணங்கள் அனைத்தையும் கலெக்டரிடம் ஒப்படைப்போம். பிறகு, அவற்றை வைத்து போலி டாக்டர்கள் மீது அதிகபட்ச நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்படும்’ என்றார்.


Next Story