குன்னூரில் மண்ணில் புதைந்து 4 தொழிலாளர்கள் சாவு: ஒப்பந்ததாரர்கள் உள்பட 8 பேர் கைது முன்னாள் ஊராட்சி தலைவர் உள்பட 5 பேருக்கு வலைவீச்சு


குன்னூரில் மண்ணில் புதைந்து 4 தொழிலாளர்கள் சாவு: ஒப்பந்ததாரர்கள் உள்பட 8 பேர் கைது முன்னாள் ஊராட்சி தலைவர் உள்பட 5 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 24 Dec 2016 3:15 AM IST (Updated: 24 Dec 2016 1:16 AM IST)
t-max-icont-min-icon

குன்னூரில் மண்ணில் புதைந்து 4 தொழிலாளர்கள் பலியான சம்பவம் தொடர்பாக ஒப்பந்ததாரர்கள் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கட்டிட உரிமையாளர்கள், முன்னாள் ஊராட்சி தலைவர் உள்பட 5 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள். 4 தொழிலாளர்கள் சாவு நீலகிரி மாவட்டம் கு

குன்னூர்,

குன்னூரில் மண்ணில் புதைந்து 4 தொழிலாளர்கள் பலியான சம்பவம் தொடர்பாக ஒப்பந்ததாரர்கள் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கட்டிட உரிமையாளர்கள், முன்னாள் ஊராட்சி தலைவர் உள்பட 5 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

4 தொழிலாளர்கள் சாவு

நீலகிரி மாவட்டம் குன்னூரை அடுத்த எடப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட மேல்கரன்சி பகுதியில் ஒரு தனியார் இடத்தில் விருந்தினர்கள் தங்க பங்களா கட்டும் பணி நடைபெற்று வந்தது. இந்த பங்களாவுக்கு செல்ல சாலை அமைக்கப்பட்டு, அதையொட்டி தடுப்புச்சுவர் கட்டும் பணியும் நடந்து வந்தது. இதில் தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியை சேர்ந்த 20 தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.

தடுப்புச்சுவர் கட்டுவதற்காக நேற்று முன்தினம் பள்ளம் தோண்டியபோது மண்சரிந்து விழுந்தது. இதில் 5 தொழிலாளர்கள் மண்ணில் புதைந்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ஜனகன் (வயது 24) என்ற தொழிலாளி உயிருடன் மீட்கப்பட்டார். மேலும் ஆறுமுகம் (48), இவருடைய மகன் பிரதாப் (18) மற்றும் காமராஜ் (22), கார்த்திகேயன் (26) ஆகிய 4 தொழிலாளர்கள் மண்ணில் புதைந்து பலியானார்கள். இவர்கள் பிணமாக மீட்கப்பட்டனர்.

8 பேர் கைது

இந்த சம்பவம் தொடர்பாக நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா உத்தரவின் பேரில் குன்னூர் போலீஸ் துணை சூப்பிரண்டு முத்தமிழ் தலைமையில் மேல்குன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் விதிமுறை மீறியும், தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படாமலும் பணி நடைபெற்றதால் கோர விபத்து நடைபெற்றது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து கட்டிட ஒப்பந்ததாரர்கள் மேத்தியாதாஸ், சுத்தேஷ், மேலாளர் கார்த்திகேயன், என்ஜினீயர் ராஜா, சூப்பர்வைசர்கள் ஜெயக்குமார், ரஞ்சித், ஹரிகரன், முருகேஷ் ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது காயம் ஏற்படும் வகையில் செயல்படுதல், தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமல் பணி செய்தல், விதிமுறை மீறி கட்டிடங்கள் கட்டுதல் போன்ற பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கட்டிட உரிமையாளர்கள்

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கட்டிட உரிமையாளர்கள் போதார், கிரீன்ஷா, அனீஷா, ஒப்பந்ததாரர் தேவதாஸ், கட்டிடத்துக்கு அனுமதி வழங்கிய எடப்பள்ளி ஊராட்சி முன்னாள் தலைவர் கோபால் ஆகிய 5 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்த சம்பவம் நடைபெற்ற இடத்தை கலெக்டர் சங்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

ஆர்.டி.ஓ. விசாரணை

பள்ளம் தோண்டும்போது மண் சரிந்து விழுந்து 4 பேர் பரிதாபமாக இறந்த சம்பவம் குறித்து குன்னூர் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட பகுதியில் பாறைகள் உடைக்கப்பட்டு உள்ளதா? என்பது குறித்தும் அவர் ஆய்வு செய்வார்.

அங்கு கட்டப்பட்டுள்ள கட்டிடம் உள்ளாட்சி விதிமுறைகளுக்குட்பட்டு கட்டப்படுகிறதா? என்பது குறித்து மாவட்ட ஊராட்சி உதவி இயக்குனர் விசாரணை நடத்துவார். இவர்கள் 2 பேரும் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story