சோலார் பேனல் மோசடி வழக்கு: முன்னாள் மத்திய மந்திரி மீதான புகாருக்கு ஆதாரங்களை ஒப்படைத்து விட்டேன் சரிதாநாயர் பேட்டி


சோலார் பேனல் மோசடி வழக்கு: முன்னாள் மத்திய மந்திரி மீதான புகாருக்கு ஆதாரங்களை ஒப்படைத்து விட்டேன் சரிதாநாயர் பேட்டி
x
தினத்தந்தி 24 Dec 2016 3:45 AM IST (Updated: 24 Dec 2016 1:42 AM IST)
t-max-icont-min-icon

சோலார் பேனல் மோசடி வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி பழனிமாணிக்கம் மீதான புகாருக்கான ஆதாரங்கள் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக கோவை கோர்ட்டுக்கு வந்த சரிதாநாயர் கூறினார். சோலார் பேனல் மோசடி புகார் கேரளாவை சேர்ந்தவர் பிஜூ ராதாகிருஷ்ணன். இவருடைய மனைவி சரிதா நாயர

கோவை

சோலார் பேனல் மோசடி வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி பழனிமாணிக்கம் மீதான புகாருக்கான ஆதாரங்கள் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக கோவை கோர்ட்டுக்கு வந்த சரிதாநாயர் கூறினார்.

சோலார் பேனல் மோசடி புகார்

கேரளாவை சேர்ந்தவர் பிஜூ ராதாகிருஷ்ணன். இவருடைய மனைவி சரிதா நாயர். இவர் கேரளாவில் சூரிய ஒளி மின்தகடு (சோலார் பேனல்) அமைத்து கொடுக்கும் நிறுவனம் நடத்தி வந்தார். இந்த நிறுவனம் மூலம் பல தொழில் அதிபர்களுக்கு சோலார் பேனல் அமைத்து கொடுப்பதாக கூறி மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

இந்த மோசடியில் கேரள மாநில முன்னாள் முதல்–மந்திரி உம்மன் சாண்டி மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்களுக்கும் தொடர்பு உள்ளதாக கூறி சரிதா நாயர் பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் இந்த மோசடி குறித்து விசாரிக்க கேரள அரசு சார்பில் தனி கமிஷன் அமைக்கப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில் கேரளமாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் பெரும்பாவூர் அருகே உள்ள முடிக்கல் பகுதியை சேர்ந்த தொழில் அதிபர் சஜாத் தொடர்ந்த மோசடி வழக்கில், சரிதாநாயர் மற்றும் அவரது கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு பெரும்பாவூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

கோவை கோர்ட்டில் ஆஜர்

இதுபோன்று கோவை வடவள்ளியில் சோலார் பேனல் அமைத்து தருவதாக கூறி ரூ.26 லட்சம் மோசடி செய்ததாக கோவை மாவட்ட குற்றப்பிரிவில் சரிதாநாயர் மீது கடந்த 2009–ம் ஆண்டு வழக்கு பதிவானது. இந்த வழக்கு விசாரணை கோவை ஜே.எம்.–7 மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்காக சரிதாநாயர் நேற்று கோவை கோர்ட்டில் ஆஜரானார். கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு விடுமுறையில் உள்ளதால் வழக்கு விசாரணை அடுத்த மாதம் 10–ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

இதைதொடர்ந்து கோர்ட்டு வளாகத்தில் சரிதாநாயர் நிருபர்களிடம் கூறியதாவது:–

ஆதாரங்கள் ஒப்படைப்பு

என் மீதான சோலார் பேனல் வழக்கில் கேரள மாநிலம் பெரும்பாவூர் கோர்ட்டு எனக்கு 3 ஆண்டு தண்டனை வழங்கியது. இந்த வழக்கில் என்மீது 8 பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. அதில் 7 பிரிவுகளில் உரிய ஆதாரம் இல்லை என விடுக்கப்பட்டு உள்ளேன். மோசடி பிரிவில் மட்டும் 3 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டது. எனக்கும் இந்த மோசடிகளுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. இதனால் இந்த தண்டனையை எதிர்த்து கேரள மாநில உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்தேன். இதனால் எனக்கு ஜாமீன் கிடைத்தது.

நான் ஏற்கனவே அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய புள்ளிகள் மீது கூறிய அனைத்து புகார்களுக்கும் ஆதாரங்களை சோலார் பேனல் கமிஷனிடம் ஒப்படைத்து விட்டேன். அதில் தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி பழனிமாணிக்கம், மீது நான் கூறிய புகார்களுக்கு என்னிடம் இருந்த ஆதாரங்களையும் ஒப்படைத்துள்ளேன்.

தண்டனை கிடைக்கும்

இந்த வழக்கை விசாரிக்கும் குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும். கேரள முன்னாள் முதல்–மந்திரி உம்மன் சாண்டி மற்றும் முன்னாள் மந்திரிகள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மீது நான் கூறிய அனைத்து புகார்களுக்கும் ஆதாரம் உள்ளது. போலீசார் நேர்மையாக விசாரணை நடத்தினால் நிச்சயம் உம்மன் சாண்டி உள்பட அனைவருக்கும் தண்டனை கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story