அவினாசியில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன வாலிபர் பெற்றோரிடம் ஒப்படைப்பு
அவினாசியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன வாலிபர் தற்போது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:– 10 ஆண்டுகளுக்கு பிறகு... அவினாசி மங்களம் ரோட்டில் வசிப்பவர் விஜயா (வயது 57). இவரது மகன் ர
அவினாசி
அவினாசியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன வாலிபர் தற்போது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:–
10 ஆண்டுகளுக்கு பிறகு...அவினாசி மங்களம் ரோட்டில் வசிப்பவர் விஜயா (வயது 57). இவரது மகன் ரமேஷ் (33). சிறிது மன நலம் பாதிக்கப்பட்டவர். விஜயா தொழிலாளி. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தனது மகனை வீட்டில் விட்டு விட்டு வேலைக்கு சென்று விட்டார். பின்னர் மாலையில் வந்து பார்த்த போது ரமேஷ் காணாமல் போய்விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உறவினர்கள், நண்பர்கள் வீடுகள் மற்றும் பல இடங்களில் தேடி பார்த்தும் ரமேஷ் கிடைக்கவில்லை.
தனது மகன் இதுவரை என்ன ஆனார் என்று தெரியாமல் 10 ஆண்டுகளாக விஜயா தவித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலையில் விஜயா வீட்டில் இருந்தார். அப்போது அடையாளம் தெரியாத 2 நபர்களுடன் ரமேஷ் வீட்டிற்கு வந்ததை பார்த்த விஜயா ஆனந்த அதிர்ச்சியுற்று நெகிழ்ச்சி அடைந்தார். மாயமான மகன் 10 ஆண்டுகளுக்கு பிறகு வீட்டிற்கு வந்து விட்ட மகிழ்ச்சி ஒரு புறம் இருக்க, இதுவரை எங்கிருந்தார்? இவர்கள் யார் என்ற ஆவலில் தனது மகனுடன் இருந்தவர்களிடம் கேட்டார்.
ஒப்படைப்புஅப்போது அவர்கள் மராட்டிய மொழியில் பேசியுள்ளனர். ஒன்றும் புரியாத விஜயா அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் இது குறித்து தகவல் தெரிவித்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவர்களிடம் ஆங்கிலத்தில் விசாரித்த போது அவர்கள் இருவரும் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த துருவ ஸ்ரீதர்படேகர் (40), அமோல்சுரேஷ் மிர்சாலிகர் (37) என்பதும், அங்கு சமூக சேவை மையம் நடத்தி வருபவர்கள் என்பதும் தெரிய வந்தது. மன நலம் பாதிக்கப்பட்ட ரமேஷ் ரெயில் மூலம் மராட்டிய மாநிலத்திற்கு சென்று அங்கு ரோட்டில் சுற்றி திரிந்துள்ளார்.
இதை பார்த்த சமூக சேவர்கள், ரமேசை அவர்களது காப்பகத்திற்கு கூட்டி சென்று தங்க வைத்து, அவருக்கு மன நலம் குணமடைய சிகிச்சை மேற்கொண்டனர். இதில் ரமேஷ் ஓரளவு குணமடைந்து தெளிவு பெற்றார். அதன் பிறகு ரமேசிடம் படிப்படியாக விசாரித்து அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? பெற்றோர் எங்கு உள்ளனர்? என்பது உள்ளிட்ட தகவல்களை பெற்று, அவினாசி அழைத்து வந்து அவரது தாயார் விஜயாவிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் ரமேஷ் உறவினர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.