கறம்பக்குடி அம்மா சந்தையில் அலைமோதும் மக்கள் கூட்டம் கடும் போக்குவரத்து நெருக்கடி
கறம்பக்குடி அம்மா சந்தையில் அலைமோதும் மக்கள் கூட்டத்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அம்மா சந்தை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கறம்பக்குடி வளர்ந்து வரும் வர்த்தக நகரமாகும். இத்தாலுகாவில் 39 ஊராட்சிகள் உள்ளன. மேலும் தஞ்சை மாவட்ட கிரா
கறம்பக்குடி,
கறம்பக்குடி அம்மா சந்தையில் அலைமோதும் மக்கள் கூட்டத்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
அம்மா சந்தைபுதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கறம்பக்குடி வளர்ந்து வரும் வர்த்தக நகரமாகும். இத்தாலுகாவில் 39 ஊராட்சிகள் உள்ளன. மேலும் தஞ்சை மாவட்ட கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் தினமும் பொருட்களை வாங்க, விற்க கறம்பக்குடி வந்து செல்கின்றனர். இதனால் கறம்பக்குடி நகர பகுதி எப்போதும் கூட்டமாக காட்சி அளிக்கும். இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கறம்பக்குடி சீனிகடை முக்கம் அருகே உள்ள நெய்வேலி சாலையில் அம்மா சந்தை தொடங்கப்பட்டது. வாரம்தோறும் வெள்ளிக்கிழமை மாலை 5 மணி தொடங்கப்பட்டு இரவு 11 மணி வரை இந்த சந்தை நடத்தப்படுகிறது. இதில் வெளியூர்களில் இருந்து வியாபாரிகள் வந்து காய்கறி, மளிகை, பழங்கள் மற்றும் மாமிச வகைகளை விற்பனை செய்கின்றனர்.
போக்குவரத்து பாதிப்பு
இங்கு அனைத்து பொருட்களின் விலையும் குறைவாக உள்ளதாக கூறப்படுவதால் வெள்ளிக்கிழமை மாலையில் நடைபெறும் சந்தைக்கு மக்கள் கூட்டம், கூட்டமாக வருகின்றனர். நெருக்கடியான பகுதியில் சாலை ஓரத்தில் சந்தை கூடுவதால் சீனிகடை முக்கம், அம்புக்கோவில் முக்கம், பஸ் நிலைய சாலை பகுதிகளில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.
மேலும் நீண்ட வரிசையில் வாகனங்கள் நிற்பதால் சரியான நேரத்தில் பஸ்களை இயக்க முடியாமல் டிரைவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இதனால் வெள்ளிக்கிழமைகளில் பல பஸ்கள் மாற்றுப்பாதையில் சென்று விடுகின்றன. நேற்று நடைபெற்ற சந்தையால் வாகனங்கள் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வரிசை கட்டி நின்றன. இதனால் கறம்பக்குடி வியாபாரிகள், பயணிகள் என அனைத்து தரப்பினருக்கும் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே கறம்பக்குடி அம்மா சந்தையை போக்குவரத்து பாதிப்பு இல்லாத இடத்தில் நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.