சென்னையில், பெண் அதிகாரி வீட்டில் திருட்டு அரசு ஊழியர் குடியிருப்பில் பட்டப்பகலில் துணிகரம்


சென்னையில், பெண் அதிகாரி வீட்டில் திருட்டு அரசு ஊழியர் குடியிருப்பில் பட்டப்பகலில் துணிகரம்
x
தினத்தந்தி 24 Dec 2016 3:48 AM IST (Updated: 24 Dec 2016 3:48 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில், அரசு ஊழியர் குடியிருப்பில் பட்டப்பகலில் புகுந்து பெண் அதிகாரி வீட்டில் ரொக்கப்பணம் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையர்கள் திருடி சென்றுவிட்டனர்.

சென்னை,

சென்னையில், அரசு ஊழியர் குடியிருப்பில் பட்டப்பகலில் புகுந்து பெண் அதிகாரி வீட்டில் ரொக்கப்பணம் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையர்கள் திருடி சென்றுவிட்டனர்.

கல்லூரி பேராசிரியர்

சென்னை பூந்தமல்லியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரி ஒன்றில் பேராசிரியராகப் பணியாற்றுபவர் மதன்குமார். இவரது மனைவி இளவரசி சென்னை தலைமை செயலகத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றுகிறார். தமிழரசு பத்திரிகை அலுவலகத்தில் தற்போது பணியில் உள்ளார்.

இவர்கள் சென்னை ராயப்பேட்டை பீட்டர்ஸ் காலனியில் வசிக்கிறார்கள். பீட்டர்ஸ் காலனியில் அரசு ஊழியர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வசிக்கிறார்கள். இங்கு காவலாளிகள் காவல் பணியில் உள்ளனர். ஆள்நடமாட்டமும் இந்த பகுதியில் எப்போதும் காணப்படும். இந்தநிலையில், நேற்று முன்தினம் பட்டப்பகலில் பீட்டர்ஸ் காலனி குடியிருப்பில் கொள்ளையர்கள் புகுந்துவிட்டனர்.

திருட்டு

பேராசிரியர் மதன்குமாரின் வீட்டு முன்பக்க கதவு பூட்டை உடைத்து கொள்ளையர்கள் புகுந்திருப்பது தெரியவந்தது. பீரோவிலிருந்த சாவி மூலம் பீரோவை திறந்துள்ளனர். பீரோவுக்குள் இருந்த ரூ.10 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் வெள்ளிப் பொருட்களை கொள்ளையர்கள் திருடிச் சென்றுவிட்டனர்.

நகைகள் லாக்கரில் வைக்கப்பட்டதால் தப்பியது. பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர கொள்ளைச் சம்பவம் குறித்து மதன்குமார் அண்ணாசாலை போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு புகார் கொடுத்தார். அண்ணாசாலை குற்றப்பிரிவு போலீசார் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பீட்டர்ஸ் காலனி குடியிருப்புக்குள் அடிக்கடி வந்துபோகும் நபர்கள்தான் வீடு பூட்டிக் கிடப்பதை கண்காணித்து இந்த திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். பீட்டர்ஸ் காலனி குடியிருப்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால், கேமராக்கள் முறையாக வேலை செய்யவில்லை என்று கூறப் படுகிறது. 

Next Story